காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கலந்துகொண்டு முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் கருணாநிதி இடையிலான இணக்கம் குறித்துப் பேசினார்.
"காமராஜரின் மருத்துவ நிலை காரணமாக, குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் உறங்குவது அவருக்கு கடினம். மின் பற்றாக்குறை விவகாரத்தில் திமுக அரசு மீது காமராஜர் விமர்சனங்களை வைத்திருந்தாலும்,
காமராஜர் தங்கிய அனைத்து அரசு பங்களாக்களிலும் குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப்பட வேண்டும் என்பதை கருணாநிதி உறுதி செய்தார்" என்று திருச்சி சிவா பேசியிருந்தார்.
எளிமையாக வாழ்ந்ததற்கான உதாரணமாக காமராஜர் போற்றப்பட்டு வருவதால், திருச்சி சிவாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்தன. திருச்சி சிவா மன்னிப்பு கோர வேண்டும் என்ற பேச்செல்லாம் எழுந்தன.
"என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என வேண்டிக் கொள்வதாக" திருச்சி சிவா அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், "கலகமூட்ட நினைப்பவர்களுக்கு இடமளிக்காதீர்" என காமராஜர் விவகாரத்தில் வேண்டுகோள் விடுத்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தப் பிரச்னைகளுக்கு இரு தரப்பிலிருந்து கருத்துகள் பகிரப்பட்டாலும், ஒருபுறம் உண்மை வரலாறு என்ன என்பதற்கான சான்றுகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த 2013-ல் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி காமராஜர் பிறந்தநாளன்று, அவரை நினைவுகூர்ந்து பெரிய பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
"தி.மு.கழக அரசு பதவிக்கு வந்த பிறகு கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்கள் ``பெருந்தலைவர் அவர்கள் ஏ.சி. இல்லாமல் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை இப்போது அவருக்குள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி. ஏற்பாடு செய்து கொடுங்கள்'' என்று சொன்னார்கள். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ``அவர்கள் செல்கின்ற எல்லா விருந்தினர் மாளிகைகளிலும் ஏ.சி. வசதி செய்து கொடுங்கள். அவர் அதிகாரத்தில் இல்லையே என்று பார்க்காதீர்கள், நாமெல்லாம் அதிகாரத்திலே வருவதற்கு அவர் வழி விட்டவர், வழி காட்டியவர், எனவே நீங்கள் யாரும் இதில் சுணங்காதீர்கள்'' என்று உத்தரவு பிறப்பித்தேன்." என்று கலைஞர் கருணாநிதி தனது பதிவில் ஒரு பத்தியில் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா கடந்த 2021-ல் இந்து தமிழ் திசையில் "காமராஜரின் கடைசி நாள்கள்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கோபண்ணா ஓர் இடத்தில் குறிப்பிடுகையில், "காமராஜரின் அறையில் குளிர்சாதனப் பெட்டி இயங்கிக்கொண்டிருந்த நிலையிலும், அவரது உடல் வியர்த்திருந்தது" என்று பதிவு செய்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் பேஸ்புக் பதிவு மற்றும் கோபண்ணாவின் கட்டுரை தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
காமராஜரின் உதவியாளராக இருந்தவர் வைரவன். காமராஜருடன் கால் நூற்றாண்டு காலம் எனும் நூலை வைரவன் எழுதியுள்ளார். இந்த நூலிலும் காமராஜரின் இல்லத்தில் குளிர்சாதனப் பெட்டி இருந்ததை வைரவன் ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Kamarajar | MK Stalin | Tiruchy Siva | Kalaignar Karunanidhi | Trichy Siva