படம்:https://twitter.com/annamalai_k
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூரில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ராஜலட்சுமி, காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரைத் தோற்கடித்தார்.

கிழக்கு நியூஸ்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி இன்று கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை அண்ணாமலை அவரிடம் வழங்கினார்.

2011-ல் அதிமுக சார்பில் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜலட்சுமி. இருந்தபோதிலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் மயிலாப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை. இந்த நிலையில், இவர் அதிமுகவிலிருந்து விலகி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இவரது வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜலட்சுமி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் விகே சிங் மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.

ராஜலட்சுமி அவர்களை மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன்" என்றார் அண்ணாமலை.

2011-ல் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜலட்சுமி 80,039 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் தங்கபாலுவுக்கு அடுத்து மூன்றாம் இடம் பிடித்தவர் தற்போது பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன்.