தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி: ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் தொடங்குவதற்கான இசைவு கடிதம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுடன் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது

ராம் அப்பண்ணசாமி

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் சென்னையில் கார் உற்பத்தியைத் தொடங்குவது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னையில் உற்பத்தி தொடங்க சம்மதம் தெரிவித்துள்ளது ஃபோர்டு நிறுவனம்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் சிகாகோவில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் இது தொடர்பாக தன் எக்ஸ் சமூகவலைதளக் கணக்கில், `ஃபோர்டு மோட்டார்ஸ் குழுவினருடன் மிகவும் ஆழமான விவாதம் நடைபெற்றது. ஃபோர்டு - தமிழ்நாடு இடையிலான 30 ஆண்டுகால கூட்டுறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று பதிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் தொடங்குவதற்கான இசைவு கடிதத்தை வழங்கியதாகவும், தமிழ்நாடு அரசுடன் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழில் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஃபோட்டு நிறுவனத்தைச் சேர்ந்த கே ஹார்ட் இன்று அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த வகையிலான உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்பதையும், எந்த ஏற்றுமதி சந்தை கவனத்தில் கொள்ளப்படும் என்பதையும் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் கே ஹார்ட்.