கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

நெல்லை விரைவு ரயிலில் பிடிபட்ட ரூ. 4 கோடி: சிக்கலில் நயினார் நாகேந்திரன்?

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் கொடுக்க எடுத்துச் சென்றதாக இவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு நியூஸ்

நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி சுமார் ரூ. 4 கோடியை எடுத்துச் சென்ற மூன்று பேர் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்கள்.

இந்தப் பணத்தை திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் கொடுக்க எடுத்துச் சென்றதாக இவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுக்க 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன.

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால், தேர்தல் பறக்கும் படையினர் அதைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்றிரவு புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது.

இதன் அடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

ரூ. 3.99 கோடி ரொக்கப் பணத்தை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு சென்றதாக இவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.