குவைத்தில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் குடியிருப்புக் கட்டடத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் குடியிருப்பில் ஏறத்தாழ 200 தொழிலாளர்கள் வசித்து வந்துள்ளார்கள்.
கேரளத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்தக் குடியிருப்புக் கட்டத்தில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலானோர் இந்தியர்கள். விபத்தில் உயிரிழந்த 41 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் நேற்று வெளியானது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மாநில வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இந்த விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவித்தார்.
வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச் சங்கங்கள் மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும், தீ விபத்து என்பதால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நேரம் எடுக்கும் என்றும் மஸ்தான் கூறினார்.
தூதரகம் மூலம் அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தவுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை குவைத்திலிருந்து இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.
உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ராம கருப்பன், வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷரீஃப் மற்றும் குனாஃப் ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.