பிரபல யூடியூபர் மீது வரதட்சணைப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூடியூபில் டெக் சூப்பர்ஸ்டார் எனும் சேனலை தமிழில் நடத்தி வருபவர் யூடியூபர் சுதர்சன். இவருக்கு கடந்த 2024-ல் காதல் திருமணம் நடைபெற்றது.
விமலா தேவி என்ற பெண்ணை காதலித்த சுதர்சன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் நகை போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரூ. 5 லட்சம் சார்பில் ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், சுதர்சன் சார்பில் மேலும் 20 சவரன் நகை வேண்டும் எனக் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக அவருடைய மனைவி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, சுதர்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வரதட்சணை, கொலை மிரட்டல் புகாரில் சுதர்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமலா தேவி மற்றும் குழந்தையை மீதமுள்ள 20 சவரன் நகை கொடுத்தால் மட்டுமே அழைத்துச் செல்வேன் என சுதர்சன் மற்றும் குடும்பத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இடையில் வரதட்சணை கேட்டு சுதர்சன், மனைவி விமலா தேவியை கொடுமைப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா என்ற இளம்பெண் கடந்த ஜூன் 28 அன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. காரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா, தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய வாட்ஸ்அப் குரல் பதிவில், தனது தற்கொலைக்குக் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், யூடியூபர் மீது வரதட்சணைப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.