தமிழ்நாடு

வின்ட்ராக் ஊழல் புகார் விவகாரம் நேர்மையாக விசாரிக்கப்படும்: மத்திய நிதியமைச்சகம் | WinTrack |

சென்னை சுங்கத்துறை மீது இறக்குமதி நிறுவனம் வைத்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

சென்னை சுங்கத்துறை மீது இறக்குமதி நிறுவனமான வின்ட்ராக் ஊழல் புகார் கூறிய விவகாரத்தில் நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இறக்குமதி சேவை நிறுவனம் வின்ட்ராக் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த அக்டோபர் 1 அன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில்,

“அக்டோபர் 1, 2025 முதல், வின்ட்ராக் இன்க். இந்தியாவில் அனைத்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்கிறது. கடந்த 45 நாட்களாக சென்னை சுங்கத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து நியாயமற்ற துன்புறுத்தலுக்குப் பிறகு இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், லஞ்சம் வாங்கிய சம்பவங்களை நாங்கள் அம்பலப்படுத்தியபோது, ​​வணிகத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையிலான பழிவாங்கும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்கொண்டோம். அதை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளையும் மீறி அழுத்தம் கொடுக்கப்பட்டதால் எங்கள் செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை உருவானது. இந்தச் சவாலான பயணம் முழுவதும் எங்களுடன் நின்ற எங்கள் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்”

என்று குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து,, வின்ட்ராக் நிறுவனத்தின் புகாருக்குச் சுங்கத்துறை உடனடி விளக்கத்தைக் கொடுத்தது. அதன் சமூக ஊடகப் பதிவில்,

”வின்ட்ராக் நிறுவனர் ப்ரவீண் கணேசனால் வைக்கப்பட்டுள்ள கடுமையான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், பின்வரும் உண்மைகளை நாங்கள் திட்டவட்டமாகப் பதிவு செய்கிறோம். இந்த இறக்குமதியாளர், தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைப்பதும், பின்னர் இந்தக் துறை உண்மையின் அடிப்படையில் மறுப்பு தெரிவித்தவுடன் அத்தகைய இடுகைகளை நீக்குவதையும் செய்து வருகிறார். தொடர்ச்சியாக இதுபோன்ற கருத்துகளை வைப்பது, உரிய செயல்முறைகளைப் பின்பற்றாமல், சரக்குகளை வெளியிட அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரம் ஆகும். பொய்க் குற்றச்சாட்டுகளால் சென்னை சுங்கம் அதன் சட்டரீதியான கடமைகளைச் செய்வதிலிருந்து பின்வாங்காது. நாங்கள் சட்டபூர்வமான, வெளிப்படையான, மற்றும் தொழில்முறை நடத்தைகளுக்கு தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம்.”

என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேர்மையான விசாரணை மேற்கொள்வார்கள் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில்,

“வின்ட்ராக் இன்க் எழுப்பிய குற்றச்சாட்டுகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தற்போதைய பிரச்னையில் நியாயமான, வெளிப்படையான மற்றும் உண்மை அடிப்படையிலான விசாரணையை மேற்கொள்ள வருவாய்த் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர், அதிகாரிகள் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்பதற்கும், தொடர்புடைய அனைத்து ஆவண ஆதாரங்களையும் முழுமையாக ஆராய்வதற்கும் விரிவான உண்மை விசாரணையை நடத்துவதற்கு வருவாய்த் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில், முறையாக வரி செலுத்துவோருக்கு ஏதுவாக, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி வணிகத்தை எளிதாக்கும் நோக்கில், வரி செலுத்துவோர் சாசனத்தை ஏற்றுக்கொள்வது, எளிய சுங்க நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல், தகராறு தீர்வுக்கான மேல்முறையீட்டு அமைப்புகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கை முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த விவகாரமும் மிகவும் தீவிரமாகக் கையாளப்படும். மேலும் சட்டத்தின்படி பொருத்தமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.