காவல் மரண வழக்கில் உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின் நண்பர் சக்தீஸ்வரன், தனிப்படை காவல்துறையினருக்கு எதிராக சாட்சி கூறிய நபர்களுக்குப் பாதுகாப்பு வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
நகை திருட்டு புகாரின்பேரில் கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் தாக்குவதை அவரது நண்பரும், சக ஊழியருமான சக்தீஸ்வரன் தனது கைப்பேசியில் பதிவு செய்தார். பொது வெளியில் வெளியிடப்பட்ட அந்த காணொளி, வழக்கு விசாரணையில் முக்கியப் பங்காற்றியது.
அதை தொடர்ந்தே தாக்குதலில் ஈடுபட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருப்புவனத்தில் இன்று (ஜூலை 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சக்தீஸ்வரன் பேசியதாவது,
`எனது பெயர் சக்தீஸ்வரன், அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை கழிவறையில் இருந்து நான்தான் எடுத்தேன். சம்பவம் நடந்தபோது அங்கு இருந்தேன், நடந்த அனைத்தையும் நீதிமன்றத்தில் கூறிவிட்டேன்.
நான்தான் அஜித்குமாரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. அங்கே என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும், ஊர்காரர்களுக்கும் அது தெரியும். அந்த மாதிரி நினைத்திருந்தால், அந்த காணொளியை நான் எடுத்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
என்னை இதில் சம்மந்தப்படுத்திப் பேசுவதால் 2 நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். சாதி, மதம் பார்த்து நான் பழகமாட்டேன். எனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி அன்றே கூறினார். எனது உயிர் குறித்து எந்த வகையிலும் நான் கவலைப்படவில்லை. நான் வாக்குமூலம் அளித்ததும்தான், மற்ற சாட்சிகளும் வாக்குமூலம் அளிக்கத் தயாரானார்கள்.
ஆனால் அவர்கள் பயப்படும் சூழல் (தற்போது) உருவாகியுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை; என்னைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. அனைத்திற்கும் துணிந்துதான் நான் தயாராக இருக்கிறேன்.
அரசையும், காவல்துறை உயரதிகாரிகளையும் நான் குற்றம்சாட்டவில்லை. அன்றைக்கு நடந்த சம்பவம் குற்றச்செயல். அதில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. எங்களுக்கு நிச்சயமாகப் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
அந்த நிகழ்வில் இருந்தே நாங்கள் இன்னும் வெளியே வரவில்லை. காவல்துறையினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதால் அவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். என் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு, அஜித்குமாரை தாக்கிய காவலருடன் (ராஜா) தொடர்பு உள்ளது.
அவரது தொலைபேசி அழைப்புகளை சோதித்துப் பார்த்தால் இதை தெரிந்துகொள்ளலாம். நீதிமன்றத்தில் இதை நான் கூறுவேன். என்னைப் பற்றி அவர் யாரிடம் கூறினார் என்பதை நான் இங்கே வெளிப்படுத்த விரும்பவில்லை. நவீன் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும்.
என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். கண்முன் நடந்தவை குறித்து நாங்கள் கூறிவிட்டோம். இரு நாள்களாக நான் தூங்கவில்லை.
நீதி வழங்கும் தெய்வமாக பார்க்கப்படும் மடப்புரம் காளி முன்பு அநீதி நடந்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவனை காப்பாற்ற முடியவில்லை என்கிற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது’ என்றார்.