கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சாத்தூரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 பேர் உயிரிழப்பு

கிழக்கு நியூஸ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சாத்தூர் அருகேவுள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இங்கு சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை, பட்டாசு மருந்துகளைக் கலக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது வெடிவிபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதில் 3 அறைகள் தரைமட்டமாகின. 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்கள் ராஜ்குமார் (45), மாரிச்சாமி (40), செல்வகுமார் (35), மோகன் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்களுடையக் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இவர்களுடையக் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் பதிவிட்டுள்ளதாவது:

"பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதிசெய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் காட்டாச்சி நடத்தும் இந்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே, இதுபோன்ற தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும். மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்" என்று குறிப்பிட்டுள்ளார்.