தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று கூறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவருக்காக வாக்களிக்க வெளிநாட்டுத் தமிழர்கள் 3 லட்சம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசினார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய செங்கோட்டையன் கூறியதாவது:-
அதிமுகவினர்தான் திமுகவில் இருக்கிறார்கள்
“தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு ஒரே பதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எதிர்காலத்தில் முதலமைச்சராக வர வேண்டும் என்பதாக இருக்கிறது. திமுகவில் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள்தான் இன்று திமுகவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவே திமுகவில் சரியான தலைவர்கள் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.
விஜய்தான் எதிர்கால அரசியலின் ஹீரோ
தலைவர் விஜய் எங்கே விரல் காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இதைத் தமிழ்நாட்டில் யாராலும் மாற்றிக் காட்ட முடியாது. படங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலத்திலும் அவர்தான் ஹீரோ என்பதை யாராலும் மாற்ற முடியாது. அதனால்தான் ரூ. 500 கோடி கொடுக்கும் திரைத்துறையை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக அவர் களமிறங்கியுள்ளார். யாருக்கும் பணம் கொடுக்காமலேயே வெற்றி பெறக்கூடியது தளபதி விஜயின் இயக்கம்தான். நமது வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.
வெளிநாட்டுத் தமிழர்களின் வாக்கு விஜய்க்குத்தான்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் நான் பேசினேன். தமிழ்நாட்டில் இதுவரை நாம் காணாத ஒரு காட்சியைக் காணப்போகிறோம். விஜய்க்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் வரவிருக்கிறார்கள். தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு வாக்களிப்பதற்காக ரூ. 50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்துகொண்டு வருகிறார்கள் என்று சொன்னால், அத்தகைய தலைவரை மிஞ்சுவதற்கு இந்தியாவிலேயே எவரும் இல்லை என்ற வரலாறு படைக்கப்போகிறோம் என்று அர்த்தம்.
தேஜகூ நிகழ்ச்சியில் தூங்கி வழிந்தார்கள்
நேற்று (ஜன. 23) நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியில் பெரும்பாலும் காலி நாற்காலிகள்தான் இருந்தன. அதையும் மீறி அமர்ந்திருந்த தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது. மேடையில் நின்று திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பேசினார்கள். ஒரு கைத்தட்டல் கூட வரவில்லை. இப்போது நான் சொல்கிறேன், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை விஜய் அகற்றுவார் என்று சொன்னதும் எவ்வளவு கைத்தட்டல் வருகிறது. இப்படி எதுவும் நேற்று நிகழவில்லை. அவர்களாக வந்தார்கள், பேசினார்கள், சென்றுவிட்டார்கள். அவ்வளவுதான் அது நேற்றோடு முடிந்துவிட்டது.
விஜய்க்கு வரும் கூட்டம் அதிசயமானது
விஜயை யாராலும் அசைக்க முடியாது என்பதை நான் எம்ஜிஆருடன் பயணித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். என் இளம் வயதில் நான் எம்ஜிஆரோடு இருந்தேன். இப்போது அரசியல் முதிர்ச்சியுடன் விஜயைப் பார்க்கும்போது இது தோன்றுகிறது. ஏனென்றால் சமீபத்தில் நானும் பொதுச்செயலாளர் என். ஆனந்தும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். அங்கெல்லாம் கையை நசுக்கி, காலை மிதித்து, தள்ளி, ஆளை விட்டால் போதும் என்று எண்ணும் அளவு மக்கள் கூடிவிட்டார்கள். ஆனால் மற்ற கட்சிகளில் அப்படி நடக்கிறதா? தலைவர்களும் தொண்டர்களும் தள்ளித் தள்ளியே இருப்பார்கள். ஆனால் நம் கட்சியில் விஜயுடன் படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் அதிசயம்.
நமக்கு விசில் சின்னத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இனிமேல் காவல்துறையினரையும் பேருந்து நடத்துநர்களையும் விசில் அடிக்கக் கூடாது என்று கூடச் சொல்லிவிடலாம். விசில் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்துதான் இறைவன் நமக்கு அதைக் கொடுத்திருக்கிறான்” என்றார்.
Former Minister Sengottaiyan said that Vijay is the future political hero of Tamil Nadu. 3 lakh overseas Tamils are waiting to vote for him.