அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று என்னை அழைத்துப் பேசியது பாஜகதான் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:-
“கோடநாட்டில் நடைபெற்ற கொலைகளை பற்றி இதுவரையிலும் குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா? எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோரும்போது கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை திமுகவின் பி டீம் என்றார்கள். ஆனால் யார் பி டீமாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலமே தெரிகிறது.
தன்னைச் சுற்றியிருந்த யாரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியதில்லை. ஆனால் 2009-ல் எடப்பாடி பழனிசாமியை நீக்கினார். அவர் இருந்தபோதே மூன்று முறை ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக அமரவைத்தார். ஏன் எடப்பாடி பழனிசாமியை அமர்த்தவில்லை? அதேபோல் நான் முதல்வர் ஆன பிறகு செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் இடம் தந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆகியிருக்கவே முடியாது. ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் கொல்லைப்புறமாக வந்துதான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார் என்பது நாடறிந்த ஒன்று.
ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தன் காலிலேயே நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவரி செய்யலாம் எனக் கனவு காணக் கூடாது. பிரசாரத்தில் வேறொரு கட்சியின் கொடி பறந்தவுடன் எடப்பாடி பழனிசாமி பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது என்று பேசினார். ஆனால் இப்போது என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும்.
இன்று அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை. அவரது மகன், மருமகன், மாப்பிள்ளை, அக்கா மகன் ஆகியோர்தான் நடத்துகிறார்கள்.
என்னை பாஜகதான் அழைத்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று என்னிடம் அவர்கள்தான் சொன்னார்கள். நானும் அதையே சொன்னேன். அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதிமுகவை விட்டால் பாஜகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு மாற்று இல்லை என்று சொன்னேன். தமிழ்நாட்டின் அரியணையில் எங்களை அமர்த்துவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேனே தவிர என்னை வைத்து பிரிவினை நாடுவதற்காக எதையும் நான் சொல்லவில்லை” என்றார்.