ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணித்தன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறத்தாழ ஓராண்டு மட்டுமே உள்ளதால், ஈரோடு கிழக்கு இந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாமல், இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டது. வி.சி. சந்திரகுமார் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. பெரியார் குறித்த சீமானின் பேச்சு பெரும் பேசுபொருளானது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரங்களில் சீமான் இதைக் காட்டமான முறையில் அணுகினார்.
பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 அன்று நடைபெறுகிறது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலும் பிப்ரவரி 5 அன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரமும் இன்று மாலை நிறைவடைந்தது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.