கச்சத்தீவைப் பற்றிப் பேசுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ”கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். இதை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய பாஜக அரசு ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவும் பாஜக அரசு மறுக்கிறது” என்று பேசினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது முதல்வரைக் கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது:-
“இன்றைய தினம் ராமநாதபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகின்ற போது என்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கச்சத்தீவு மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
ஸ்டாலின் அவர்களே, கச்சத்தீவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. அவருக்குத் தகுதி இருக்கிறதா? அந்தக் கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் இந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, திமுக ஆட்சி. அந்தக் காலகட்டத்தில்தான் நம் மீனவர்கள் அவருடைய வலைகளை உலர வைக்கும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தீர்கள். என்ன நாடகமா ஆடுகிறீர்கள்? மக்கள் மறக்கவில்லை. மீனவ மக்கள் மறக்கவில்லை.
ஆனால் ஜெயலலிதா, நம் மீனவ சமுதாய மக்களின் நலன் கருதி, அதிமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதுதான் அதிமுக ஆட்சி. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாடு மக்களுக்கு பிரச்னை வருகின்ற போது அதைத் தீர்ப்பதில் முன்னோடியாக இருப்பது அதிமுக. மறந்து பேசாதீர்கள்.
16 ஆண்டுகள் காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைத்த கட்சி திமுக கட்சி. உங்களுக்கு பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? மத்தியில் 16 ஆண்டுகள் காலம் சுகத்தை அனுபவித்துவிட்டு, அதிகாரத்தை எல்லாம் அனுபவித்துவிட்டு, இன்றைக்கு கூக்குரல் விடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மக்கள் மறக்கவில்லை.
ஏன் அப்போது மீனவர்கள் படுகின்ற கஷ்டம் உங்களுக்கு தெரியவில்லையா? மத்திய ஆட்சி அதிகாரித்தில் இருந்தபோது, நீங்கள் மத்திய அமைச்சராக அங்கம் விகித்தபோது இந்த மீனவ சமுதாயம் பாதிக்கப்படுகிறது உங்களுக்குத் தெரியவில்லையா?
அவர் என்ன நோக்கத்துடன் பேசுகிறார்? அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. அங்கிருக்கும் மீனவ மக்களுடைய வாக்கு அவருக்கு தேவைப்படுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். மீனவ சமுதாயத்தின் மேல் அதிமுகவுக்கு அக்கறை இல்லாதது போலவும், திமுகவுக்கு மட்டும்தான் அக்கறை இருப்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி, இன்று ராமநாதபுரத்தில் பேசியிருக்கிறார்.
ஸ்டாலின் அவர்களே, உண்மையில் அந்தப் பகுதி மீனவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமானால், நீங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கின்ற போது அந்த இலங்கை அரசிடம் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தவறவிட்டுவிட்டு, எப்போது எங்கள் மீது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.”
இவ்வாறு பேசினார்.