மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி 2021-ல் 12-ம் வகுப்பை முடித்தார். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி, கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயின்று வந்துள்ளார். இவர் நான்காவது முறையாக நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளார்.
ஏற்கெனவே இருமுறை நீட் நுழைவுத் தேர்வை எழுதியும் போதிய மதிப்பெண்கள் கிடைக்காததன் விரக்தியிலும் மன அழுத்தத்திலும் இருந்த மாணவி வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
மாணவியின் தற்கொலை தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாக சாடியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்காது என்று பச்சைப் பொய்யைச் சொல்லி ஏமாற்றியதாகச் சாடியுள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்புடைய அவருடையப் பதிவு
"நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
செப். 2021 - தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021 - அனு, கீர்த்திவாசன்
நவ. 2021 - சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022 - தனுஷ்
ஜூலை 2022 - முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022 - ப்ரீத்தி ஸ்ரீ
செப். 2022 - லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023 - சந்துரு
ஏப்ரல் 2023 - நிஷா
ஆகஸ்ட் 2023 - ஜெகதீசன்
டிசம்பர் 2023 - ஆகாஷ்
அக்டோபர் 2024 - புனிதா
மார்ச் 2025 - இந்து, தர்ஷினி
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!" என்று பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, நீட் தேர்வுக்கு முடிவுகட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார். நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.
நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது. இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
(தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீர்வல்ல)