எடப்பாடி பழனிசாமி முகத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை, அந்தக் காணொளியில் அப்படித் தெரிந்திருக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை மணலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது -
“கரூரில் நேற்று நடந்த திமுகவின் முப்பெரும் விழாவைப் பார்த்தபோது எனக்கு ஐயோ பாவம் என்றுதான் தோன்றியது. ஏனெனில், இதே கரூருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் வந்தபோது இங்கே 2 திருடர்கள் இருப்பதாகக் கூறினார். பெரிய திருடன் செந்தில் பாலாஜி, சின்ன திருடன் அவரது தம்பி என்று கூறினார். ஆனால் இப்போது அதே கரூரில் செந்தில் பாலாஜியை உலக மகா உத்தமராகவும், அவருடைய தம்பிக்கு சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு மாறிவிட்டார். இதுதான் இன்றைய திமுகவின் நிலை. இது முதல்வர் ஸ்டாலின் ஒரு மண் குதிரையின் மீது அமர்ந்து காவேரி கரையை நோக்கிப் போவது போலத் தெரிகிறது.
2026 தேர்தலுக்கு மண் குதிரையில் காவேரி கரைக்குப் போகிறார். ஆனால், வரக்கூடிய ஆற்று வெள்ளத்தில் மண் குதிரை அடித்துச் செல்லப்பட்ட பிறகு, அவர் தப்பிப்பது கடினமாக இருக்கும். மேடையில் அமர்ந்து பாஜகவுக்குப் பாடம் எடுக்கிறார். ஆனால், பாஜக ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பெற்று வருகிறது. இந்த நிகழ்வும் அதற்கு ஒரு சாட்சி.
கரூர் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழா, திமுக அரசில் சாராயக் காசில் நடத்தப்பட்ட விழாவாகவே தெரிகிறது. முதலமைச்சர் கண்ணாடியில் தன்னைப் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். பிறகு பாஜகவுக்கு அறிவுரை கூறலாம்.
திமுகவுக்கு எடுபிடியாக செயல்படும் ஒரே கட்சி காங்கிரஸ் என்று புரிந்து கொள்ள வேண்டும். இன்று காங்கிரஸ் கட்சியை எடுபிடி கட்சி என்று பெயர் மாற்றலாம். பாஜக பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், ஒரிசா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, புதுச்சேரி என பல இடங்களில் ஆட்சி செய்கிறது. ஆனால், காங்கிரஸ் எத்தனை இடங்களில் ஆட்சியில் உள்ளது என்று கேட்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக உள்துறை அமைச்சரைச் சந்தித்தது அதிகாரப்பூர்வமாகவே அனைவருக்கும் தெரியும். அந்த சந்திப்பில் அவர் முகத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை. காணொளிகளில் அப்படித் தெரிந்திருக்கலாம். இந்த சந்திப்பு பற்றி நான் எடப்பாடி பழனிசாமியுடனோ அமித்ஷாவுடனோ பேசவில்லை. ஆனால், இது ஒரு பொதுப்படையான கருத்து. எடப்பாடி பழனிசாமி, அன்று அதிமுகவை சிலர் கபளீகரம் செய்ய முயன்றபோது, பாஜக ஆட்சி உறுதுணையாக இருந்ததாகக் கூறியது வரவேற்கத்தக்கது. இது தமிழக மக்களின் நலனுக்காக பாஜக செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது.
திமுக அரசு சட்டப்பேரவையில் 256 திட்டங்களை அறிவித்து, பின்னர் அவற்றை செயல்படுத்த முடியாது என்று திரும்பப் பெறுவது கண்டிக்கத்தக்கது. அரசு தனது வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், எதற்காக ஆட்சியில் உள்ளது? முதலமைச்சர் இந்தத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்.
விஜய்யின் சுற்றுப் பயணத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது. ஆனால், கூட்டம் பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், அமைதியாக நடைபெற வேண்டும். அரசும், விஜய்யின் கட்சியும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவராக அமித்ஷா உள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அவரை முதலமைச்சராக்குவதற்கு பாஜக தொண்டர்கள் உழைப்பார்கள்.
அண்ணாமலை எம்எல்ஏ கிடையாது, எம்பி கிடையாது, பஞ்சாயத்து தலைவர் கிடையாது. மக்களுடைய வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளமாகக் கிடையாது. ஆனால், வருஷம் வருஷம் நான் என் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவேன். கடந்த 10 ஆண்டு கால வங்கி கணக்கு விவரங்களைப் பாருங்கள், எல்லாவற்றையும் பாருங்கள். நான் என்னென்ன வாங்கியிருக்கிறேன் என்று பாருங்கள்.
நான் சொந்தமாக சம்பாதித்து ஒரு விவசாய நிலம் வாங்கினாலும், அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எதற்காக வெளிப்படையாக இருக்கிறேன் என்றால், எங்களை நம்பியிருப்பவர்கள் நான் என்ன செய்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். அரசியலும் செய்கிறேன், இந்த வேலையும் செய்கிறேன். இதற்காகவே விளக்கங்கள் கொடுக்கிறேன்.
பாஜக கஷ்டத்தில் இருந்தபோது டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்கள். அரசியல் வேறு, கூட்டணி வேறு, நட்பு வேறு. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரையும் நேரில் சந்தித்துப் பேசுவேன். ”
இவ்வாறு பேசினார்.