படம் : https://x.com/EPSTamilNadu/media
தமிழ்நாடு

உயிர்கள் பறிபோவதை தடுக்காத ஆட்சி இருந்து என்ன பயன்?; எடப்பாடி பழனிசாமி கண்டனம் | Edappadi Palaniswami |

சென்னையில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம்...

கிழக்கு நியூஸ்

சென்னையில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் முதல் தெருவில் மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி உடலை மீட்டு கேகே நகரிலுள்ள இஎஸ்.ஐ மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

இந்நிலையில், மழைநீர் வடிகாலில் பெண் விழுந்த சம்பவம் குறித்து முன்னாள் முஇதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழைநீர் வடிகால் பணிகள் 95%, 97% முடிவடைந்து விட்டது என்று நான்கரை ஆண்டுகளாக சதவீகக் கணக்கு போட்ட தமிழக அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன? ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை, மழைநீரும் வடிந்த பாடில்லை, அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை, இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த தீபாவின் மரணத்திற்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Edappadi Palaniswami | EPS Condemns DMK | Chennai Slit Catch Pit Accident | Woman found dead into Slit catch pit | Choolaimedu Accident