தமிழ்நாடு

செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த காலி அல்வா பாக்கெட்டுகள்! | Edappadi Palaniswami |

உருட்டு கடை அல்வா என்று அச்சடிக்கப்பட்ட காலி பாக்கெட்டுகளை அளித்த எடப்பாடி பழனிசாமி...

கிழக்கு நியூஸ்

திமுக அரசு மக்களை ஏமாற்றி உருட்டு கடை அல்வாவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி காலி அல்வா பாக்கெட்டுகளைச் செய்தியாளர்களுக்கு அளித்தார்.

தமிழக சட்டப்பேரவை முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த எடப்பாடி பழனிசாமி, ‘திமுக உருட்டு கடை அல்வா’ என்று அச்சிடப்பட்ட காலி பாக்கெட்டுகளைச் செய்தியாளர்களிடம் அளித்தார்.

முன்னதாக அவர் பேசியதாவது:-

“அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடமிருந்து ரூ. 1,18,245 கோடி பெறப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் சுமார் ரூ. 1,42,291 கோடி மத்திய திட்ட நிதி பெறப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ரூ. 3,75,272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வரி பகிர்வும் அதிகம். கடனும் அதிகமாக வாங்குகிறார்கள். ஆனால் எந்தத் திட்டமும் இல்லை. இதைப்பற்றி கேள்வி கேட்டால் சதவீதங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

2021-ல் திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நிதி மேலாண்மை சரி செய்யப்படும், அதற்கென்ற ஒரு நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் என்று கூறினார். நிபுணர் குழு அமைக்கப்பட்டு, கடன் வாங்கியதுதான் அதிகமாக இருக்கிறது. சுமார் ரூ. 4,50,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். இதுவரைக்கும் நாலரை ஆண்டு காலத்தில் மொத்தமாக 73 ஆண்டு காலத்தில் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டு காலத்தில் ரூ. 4,50,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக தொழில்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால் பாக்ஸ்கான் தலைமை நிறுவனம் ஏதும் முதலீடு செய்யப்படவில்லை என்ற ஒரு கருத்தை வெளியிட்டது. அதற்கு நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதம் வந்தபோது பாக்ஸ்கானுக்கு உள்ள பல துணை நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம் தான் இந்த ரூ. 15,000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவிக்கிறார். அந்த துணை நிறுவனம் எதுவென்று வெளிப்படையாக சொல்லுங்கள். இன்றைக்கு இந்த அரசாங்கம் அமைத்த பிறகு எவ்வளவு தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன? எவ்வளவு நிதி பெறப்பட்டிருக்கிறது? எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளைத்தாளை எடுத்து காட்டுகிறார். அதுதான் உண்மை. வெள்ளைத்தாள் எப்படி இருக்கிறதோ அது மாதிரிதான் இந்த ஆட்சியின் நிலைமை இருக்கிறது.

முதல்வர் ஜெர்மனி நாட்டுக்குச் செல்லும்போது செய்தியாளர்களிடம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் ரூ. 10,62,000 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் கூறுகிறார். இவை நடைமுறைப்படுத்தப்படும்போது 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு செய்தியை சொல்லிவிட்டு, அதன் பிறகு 77% புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என்கிறார். அப்படி 77% புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். அப்படி எந்தவித ஒரு சம்பவம் தமிழகத்தில் இருந்ததா தெரியவில்லை.

அதோடு எல்லாருக்கும் உருட்டுக்கடை அல்வா கொடுக்கிறேன். இதை வாங்கி பாருங்கள். இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். 2021-ல் இன்றைய முதலமைச்சர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சுமார் 525 அறிவிப்புகள் வெளியிட்டார். அப்படி அறிவிப்பு வெளியிட்ட பிறகு சுமார் 10% அறிவிப்பு கூட நிறைவேற்றவில்லை. எல்லாருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்றார்.