தமிழ்நாடு

தவெகவில் இணைகிறாரா அதிமுக அமைப்புச் செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன்?: இபிஎஸ் பதில்

80 வயதான செஞ்சி ராமச்சந்திரன் மூன்று முறை மக்களவை எம்.பி.யாகவும், வாஜ்பாய் அரசில் மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்

ராம் அப்பண்ணசாமி

அதிமுகவைச் சேர்ந்த 80 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமசந்திரன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அக்கட்சியின் அவைத் தலைவராகவுள்ளார் என நேற்று (செப்.08) செய்தி பரவியது. இது குறித்து இன்று செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

இன்று (செப்.09) புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்தார் எடப்பாடி பழனிசாமி. பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, `அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமசந்திரன் தவெகவில் இணையவிருப்பதாகவும், விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வருகிறது’ என்று செய்தியாளர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, `வேண்டுமென்றே இவ்வாறு புரளி கிளப்பப்படுகிறது. அதிமுக ஒரு கடல் அவரைப் போல ஆயிரக்கணக்கானோர் இந்தக் கட்சியில் அங்கம் வகித்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு சில ஊடகங்களும் பத்திரிக்கைகளும் வதந்தியைப் பரப்புகின்றன. இது கண்டிக்கத்தக்கது’ என்றார்.

80 வயதான செஞ்சி ராமச்சந்திரன் மூன்று முறை மக்களவை எம்.பி.யாகப் பதவி வகித்துள்ளார். 1999 முதல் 2003 வரையிலான வாஜ்பாய் அரசில் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்துள்ளார் செஞ்சி ராமச்சந்திரன்.