எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) https://x.com/EPSTamilNadu
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | EPS |

காயம் ஏற்படும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் அரசு செலவில் காப்பீடு செய்து தரப்பும் என்றும் வாக்குறுதி...

கிழக்கு நியூஸ்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளால் தாக்கப்பட்டு வீரர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார்.

நாமக்கல் அருகே சாலப்பாளையம் கிராமத்தில் இன்று அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, விஜய பாஸ்கர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

போட்டியில் சீறிய காளைகள்

இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை தாவிப்பிடித்து அடக்கினர். மாடுகளை அடக்கிய வீரர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளுக்கு விழாக்குழவினர் சார்பில் சைக்கிள், கட்டில் மெத்தை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஜல்லிக்கட்டு என்பது நம் பாரம்பரிய விளையாட்டு. இளைஞர்கள் காளைகளை அடக்கித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு. நான் வரும்போது சில கோரிக்கைகளை என்னிடம் வழங்கினார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஏதேச்சையாக காளைகளால் தாக்கப்பட்டு வீர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்யும் வீரர்களுக்கு அரசு சார்பில் காப்பீடு செய்து தரப்படும். மேலும், ஜல்லிக்கட்டு காளைகளும் கணக்கிட்டு காப்பீடு செய்யப்படும்” என்றார்.

Edappadi Palaniswami announced an election promise that if athletes die after being attacked by bulls during Jallikattu competitions, their families will be provided with financial assistance of Rs. 10 lakh each.