எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக அரசு: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து இபிஎஸ்! | TAPS | Edappadi Palaniswami

"பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து..."

கிழக்கு நியூஸ்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, ஃபோட்டா - ஜியோ அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இதற்கிடையே, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தத் திட்டத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என சமூக ஊடகங்களில் தொடர்ந்து கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.

'ஒன்றிய அரசு, குன்றிய அரசு' என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளார்.

பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இச்செயல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Edappadi Palaniswami | EPS | AIADMK | ADMK | DMK | MK Stalin | Jactto Geo | Fota Geo | Tamil Nadu Assured Pension Scheme | TAPS |