ANI
தமிழ்நாடு

டாஸ்மாக் சோதனைக்கு எதிரான தமிழக அரசு மனு: தள்ளுபடி செய்ய அமலாக்கத்துறை கோரிக்கை

சோதனைக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் முறையிடும் வாய்ப்பு உள்ள நிலையில், அதன்மூலம் நிவாரணம் தேடாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு.

ராம் அப்பண்ணசாமி

டாஸ்மாஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, அபராத்துடன் தள்ளுபடி செய்யக் கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக், தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்கிறது. இந்த பணியின்போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கிலும், சில தனியார் மதுபான ஆலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

சோதனை முடிவுக்கு வந்த பிறகு, அது குறித்து அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார், பிறகு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், `அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சோதனைக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் முறையிடும் வாய்ப்பு உள்ள நிலையில், அதன்மூலம் நிவாரணம் தேடாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு.

டாஸ்மாக் அதிகாரிகளின் சுதந்திரம் மீறப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் வழக்குத் தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் வழக்குத் தொடர முடியும். ஆதாரங்களை சேகரிப்பதற்காக மட்டுமே அதிகாரிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டபூர்வமான சோதனையை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாக சிறை பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.