ANI
தமிழ்நாடு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இல்லங்களிலும், சில தனியார் மதுபான ஆலைகளிலும் சோதனை நடைபெற்றது.

ராம் அப்பண்ணசாமி

டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (மார்ச் 7) நடைபெற்று வருகிறது.

2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அவரது மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று கடந்த 2024 செப்டம்பரில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று (மார்ச் 7) சோதனை மேற்கொண்டார்கள்.

மிகவும் குறிப்பாக, சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அத்துடன் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லங்களிலும், சில தனியார் மதுபான ஆலைகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் (மார்ச் 7) சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதப் பணப்பரிவத்தனை தொடர்பாக பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே எந்த வழக்கின் அடிப்படையில் இது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.