கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

திருவேங்கடம் என்கவுன்டரில் சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

யோகேஷ் குமார்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 பேரில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த என்கவுன்டரில் சந்தேகம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த 11 பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவரும் ஒருவர். கொலை நடந்த விதம் குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடம் என்பவரைக் காவல் துறையினர் மாதவரம் அருகே அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, திருவேங்கடம் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பிக்க முயற்சித்த நிலையில், காவல் துறையினர் இவரைத் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இதில் திருவேங்கடம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திருவேங்கடத்தை அதிகாலையில் அவசரமாக அழைத்துச் சென்றது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் பேசியதாவது: “இன்று சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவர், ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர். மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக அதிகாலையில் அவரை வேக வேகமாக அழைத்துச் சென்றது ஏன்?

கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி கைவிலங்குப் போட்டு பாதுகாப்போடு சென்றிருக்க வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதி இருப்பதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே, “உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை” என்று ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த என்கவுன்டர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது” என்றார்.