மின்சார வாரியம்  
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளது: மின்சார வாரியம் தகவல்

யோகேஷ் குமார்

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 20,125 மெகா வாட் மின்சாரம் பதிவாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் மின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஏசி பயன்பாடு அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சராசரி மின் தேவை 30 கோடி யூனிட்டாக இருந்த நிலையில், தற்போது தினசரி மின் தேவை 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின் தேவை அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின் தேவையுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகபடியான மின் தேவை இருக்கும்.

அந்த வகையில் கடந்த 5 அன்று தமிழ்நாட்டின் மின் தேவை 19,580 மெகா வாட்டாக பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் 20,125 மெகா வாட் மின்சாரம் பதிவாகியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், “தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து தனது நுகர்வோருக்கு நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்து வருகிறது” எனவும் தெரிவித்துள்ளது.