படம்: https://www.instagram.com/naamtamilarkatchi
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு மக்களுடையத் தோல்வி: நாதக வேட்பாளர் அபிநயா

கிழக்கு நியூஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு மக்களுடையத் தோல்வி என நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அந்நியூர் சிவா 1.23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.

திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா உள்பட போட்டியிட்டவர்களில் 27 பேர் டெபாசிட்டை இழந்துள்ளார்கள்.

தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தெருவுக்குத் தெரு கூடாரம் அமைத்து, மக்களை அங்கு அடைத்துவைத்து மற்ற கட்சிகளை வாக்கு சேகரிக்கவிடாமல் செய்தது, இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பட்டுவாடா செய்தது, பரிசுப் பொருள்கள், இனிப்புகளில் மூக்குத்தியை மடித்துக்கொடுத்தது என இவையனைத்தையும் கேவலமாகப் பார்க்கிறோம்.

இதற்கெல்லாம் ஒருமுறைகூட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அதிகாரம் வலிமையாக இருப்பதைதான் இது காட்டுகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் இவர்கள் முழுக்கமுழுக்க செயல்பட்டுள்ளார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை.

இங்கு நடைபெற்றது தேர்தல் அல்ல. விக்கிரவாண்டியை திமுக ஏலம் எடுத்துள்ளார்கள். இதற்கு எதற்கு மக்களைக் கஷ்டப்படுத்தி, அவர்களை ஏமாற்றி இதுவொரு தேர்தல் என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள காவலர்களைப் பாதுகாப்புக்குப் போட்டு காசுதான் செலவு. இதன்பிறகு, இடைத்தேர்தல் வந்தால், ஏலம் எடுத்துவிட்டு போய்விடுங்கள். ஊடகங்கள், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் என யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி இருக்க எதற்காக இந்தத் தேர்தல்.

எனவே, இதை நாங்கள் தோல்வியாகப் பார்க்கவில்லை. இது மக்களுடையத் தோல்வி. பணநாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம்" என்றார் அபிநயா.