மக்களவை தேர்தலில் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், தபால் வாக்குகளில் எண்ணப்பட்டன. அதில், விஜய பிரபாகரனுக்கு 2,634 வாக்குகள் கிடைத்த நிலையில், மாணிக்கம் தாக்கூருக்கு 2,380 வாக்குகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் 3,85,256 வாக்குகள் பெற்ற மாணிக்கம் தாக்கூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில், 3,80,877 வாக்குகள் பெற்ற விஜய பிரபாகரனை தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18-ல், மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் விஜய பிரபாகரன்.
தனது மனுவில், தபால் வாக்குகள் மற்றும் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கு மறு எண்ணிக்கை கோரியும், வேட்பு மனுவில் மாணிக்கம் தாக்கூர் உண்மைத் தகவல்களை மறைத்ததாகவும், முறைகேட்டில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் விஜய பிரபாகரன்.
இந்நிலையில், விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் மாணிக்கம் தாகூர். அவரது வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், அதை ரத்து செய்து உத்தரவிட்டார்.