தமிழ்நாட்டில் வாக்களிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களில் 869 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
“சென்னையில் 96.27% கணக்கீட்டுப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 33.59% படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. 50% படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் சுமார் 2 லட்சம் படிவங்கள் வந்துள்ளன. அவற்றையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ளேயே சரிபார்த்து நிறைவு செய்துவிடுவோம். டிசம்பர் 4 வரை சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடக்கும். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குக் கூடுதல் அவகாசம் இல்லை. இப்பணிகளில் 33,000 தன்னார்வலர்கள், 88,000 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அதில் 327 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தங்கள் பணிகளை முடித்துவிட்டார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்திலும் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்தப் படிவமும் நிராகடிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய அவகாசம் வழங்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு விடுபட்டவர்கள் கண்டிப்பாக சேர்க்கப்படுவார்கள். தகுதியற்ற காரணங்களினால், வாக்காளர்கள் நீக்கப்பட மாட்டார்கள். இறந்தோர், இடம்பெயர்ந்தோர், படிவம் திருப்பித் தராதோர் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும்.
பதிவேற்றம் செய்யும் இணையதள சேவைகள் இப்போது சீராக இருக்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள். எந்த அரசியல் தலையீடும் அவர்களுக்கு இல்லை. அப்படி ஏதேனும் குற்றச்சாட்டு எழுந்தால் அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் வாக்களிக்க விரும்பினால், அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஃபார்ம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை ஃபார்ம் 8 மிகக் குறைவாகவே வந்துள்ளது. மொத்தமாகவே 869 விண்ணப்பங்கள்தான் வந்துள்ளன” என்றார்.
Election Officer Archana Patnaik has stated that 869 people from other states have applied to vote in Tamil Nadu.