இதுவரை கற்பனையில் மிதந்துகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஜோதிடராகவே மாறி விரக்தியில் எல்லைக்குப் போய்விட்டார் என விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னையில் இன்று (அக்.23) நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய பொறாமை தாங்க முடியாமல் திமுக ஆட்சியின் செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அத்துடன் அவர் விடவில்லை. திமுக கூட்டணி விரைவில் உடையப் போகிறது என்கிறார்.
இதுவரை கற்பனையில்தான் எடப்பாடி பழனிசாமி மிதந்துகொண்டிருந்தார் என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோதிடராகவே மாறியுள்ளார். விரக்தியில் எல்லைக்கு அவர் போய்விட்டார். எங்களின் கூட்டணி தேர்தலுக்காவோ, பதவிக்காகவோ உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. எங்களுடையது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி.
எங்களுக்குள்ளே விவாதங்கள் இருக்கின்றன, ஆனால் விரிசல் ஏற்படவில்லை. பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனிப்பதைப் போல இன்று பக்கத்துக் கூட்டணியை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சியை வளர்ப்பதில் அவருக்கு யோக்கியதை இல்லை. வளர்ந்திருக்கக் கூடிய நம்முடைய கட்சியையும், அரசையும் பார்த்து அவர் ஜோதிடம் கூறுகிறார்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்கிறோம். சென்னையில் மழை பெய்தவுடன் சேலத்துக்கு ஓடிச்சென்று பதுங்கிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருந்தாலும் அவர் வரமாட்டார், ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் வரமாட்டார். ஏதோ கனவு கண்டு ஜோதிடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
கனவு காணவேண்டாம், உறுதியாக கூறுகிறேன் 2026 மட்டுமல்ல, அதனை தொடர்ந்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகதான் வெற்றிபெறும்’ என்றார்.