தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் விதிகளின்படி சாலை வரி விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பானது. இதனை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவித்துள்ளன.
இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்குப் புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழ்நாட்டுப் பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழ்நாட்டு மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Opposition leader Edappadi Palaniswami has urged the government to intervene and find a proper solution in the matter of omni bus services from Tamil Nadu to neighboring states being suspended.