காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பிளவு ஆரம்பமாகிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஊட்டி கூடலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உடனிருந்தார். அப்போது அவர் பேசியதாவது:
"அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தேர்தல் களத்தில் அதிமுக முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்துக்கு தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது.
அதிமுக தலைவர் மட்டுமல்ல, தொண்டர்கள் கூட யாருக்கும் அடிமை இல்லை. அப்படிதான் எம்ஜிஆர், ஜெயலலிதா எங்களை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய சொந்தக் காலில் நிற்கிறோம், சொந்த உழைப்பில் நிற்கிறோம். உங்களை கூட்டணித் தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளும் தாங்கிப்பிடித்துள்ளன.
நாட்டிலேயே ரோல்மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் தான் ரோல்மாடல்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பல கட்சிகளிருந்து வந்தவர். எந்தக் கட்சிக்குச் செல்கிறாரோ, அந்தக் கட்சியின் கொள்கையைக் கடைபிடிக்கிறவர் தான் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு மாநிலத்துக்குக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒரு கருத்தை முன்வைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி ஒரு கருத்தைச் சொல்கிறார். எங்களுக்குக் கூடுதல் இடம் வேண்டும் என்கிறார்கள். திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அழகிரி கோரிக்கை வைக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, நீங்கள் கேட்காதீர்கள் என்று சொல்கிறார்.
காங்கிரஸ் தொண்டனாக இருந்தால், காங்கிரஸ் மீது பற்று இருந்தால், ஆரம்பக் காலத்திலிருந்து காங்கிரஸுக்கு உழைத்துக் கொண்டிருந்தால், இந்த எண்ணம் வந்திருக்குமா? அவருக்குத் திமுகவைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். காங்கிரஸுக்கு விஸ்வாசமாக இல்லாமல் திமுகவுக்கு விஸ்வாசமாக இருக்கிறார்.
ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் இன்று கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கோஷத்தை எழுப்பிவிட்டார்கள். காங்கிரஸ், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கு ஆரம்பமாகிவிட்டது.
திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. திமுகவின் கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றும் நிலை வந்தபோது, அதைக் காப்பாற்றி கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
AIADMK | ADMK | Edappadi Palaniswami | DMK | MK Stalin | Congress | Selvaperunthagai | Udhayanidhi Stalin |