தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.
கரூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
இதன்பிறகு, கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"இதுவரை 39 பேர் இறந்துள்ளதாகவும் சுமார் இந்த அரசு மருத்துவமனையிலே 51 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் இரண்டு பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
இந்தப் பொதுக்கூட்டம் சிறிது நேரத்திலேயே இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது எங்களுக்கு ஊடகத்தின் வாயிலாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில அந்த மின்சார விளக்குகள் அணைந்ததாகவும் மின்விளக்குகள் அணைந்ததாகவும் அப்பொழுது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அந்தக் கூட்ட நெரிசில சிக்கியிருக்கிறார்கள். அதனால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இது செய்திகளில் எல்லாம் வந்திருக்கிறது. எல்லா ஊடகத்திலயும் பத்திரிக்கையும் வந்த செய்தி.
அதோட தவெகே கூட்டம் அறிவிக்கப்பட்டு இந்த கூட்டம் நடைபெறும் பொழுதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இதே கட்சி தவெக கட்சி நான்கு மாவட்டத்தில் அவர்களுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த நான்கு கூட்டத்திலும் எப்படி மக்கள் கலந்து கொள்கிறார்கள், எப்படிப்பட்ட நிலைமை என்பதை எல்லாம் ஆய்வு செய்து அதற்கு ஏற்றவாறு அரசாங்கமும் காவல் துறையும முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதேபோல அந்த பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொலைக்காட்சியில் பார்க்கின்ற பொழுது தெளிவாக தெரிகிறது.
ஏற்கனவே நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் முழுமையானப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்துதான் நான் இதை குறிப்பிடுகிறேன்.
அதோட இந்த கட்சி மட்டுமல்ல அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நான் எழுச்சி பயணம் மேற்கொண்டிருக்கின்றேன். அந்த நிகழ்ச்சியில் கூட காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவில்லை. மூன்று, நான்கு மாவட்டத்தில பாதுகாப்பு கொடுத்தார்கள். மீதமுள்ள எந்த மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் காவலர்கள், கூட்ட நெரிசலை ஒழுங்கபடுத்தவில்லை.
அதே நேரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இன்றைக்கு முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ அல்லது திமுக கட்சி கூட்டம் நடைபெறும் பொழுது ஆயிரக்கணக்கான காவலர்களை நியமிக்கின்றார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது.
இதை வந்து இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்க்க கூடாது. ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று பாராமல் நடுநிலையோடு இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும். காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி இருக்கின்ற பொழுது பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம். முழுமையான பாதுகாப்பு கொடுத்தோம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எங்களுடைய ஆட்சியில நடைபெறவில்லை.
ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டம் நடத்துவதே பெரிய சிரமம். நீதிமன்றத்திற்கு சென்றுதான் அந்த நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அப்படி கூட்டம் நடத்துகின்ற சூழ்நிலை இருக்கின்ற பொழுதும் நீதிமன்றம் முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் கூட இந்த அரசு, காவல்துறைகள் எதிர்கட்சி என்ற பார்வையில் முழுமையான பாதுகாப்பைக் கொடுப்பதில்லை. முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால், இந்த தள்ளுமுள்ளுகளை சரி செய்திருக்கலாம், இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.
அதோடு ஒரு அரசியல் கட்சி தலைவரும் அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நான்கு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலைமை எப்படி இருக்கின்றது, அதில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன, அந்தக் குறைபாடுகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அவர்களும் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்றவாறு முன்னேற்பாட்டோடு அந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும். அதனால் எல்லாமே விலைமதிக்க முடியாத உயிர்கள். ஓர் அரசியல் கட்சி கூட்டமென்று சொன்னால் அந்தக் கட்சியுடைய பாதுகாப்பை நம்பி அரசாங்கத்தை நம்பி காவல் துறையை நம்பித்தான் பொதுமக்கள் அந்தப் பொதுக்கூட்டத்தில கலந்து கொள்கிறார்கள். அரசாங்கமும் காவல்துறையும் பொதுக்கூட்டத்தில் நடத்துபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதேபோல அரசியல் கட்சி தலைவர்களும் அங்கே கூடும் கூட்டத்திற்கு ஏற்றவாறு தாங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஆகவே காலையிலே இன்றைக்கு ஒரு நேரத்தை குறிப்பிடுகிறார்கள். அந்த நேரத்திலே வந்து பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. பல மணி நேரம் கழித்து வந்து பொதுக்கூட்டம் நடக்கின்ற பொழுது அதிலே சில பிரசனைகள் ஏற்படுகின்றது. இதை எல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது நான் யாரையும் குற்றம் சொல்லி, குற்றம் சொல்வது பொருத்தமாக இருக்காது. விலைமதிக்க முடியாது நாம் உயரை இழந்திருக்கின்றோம். இதுவரை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டது கிடையாது. இன்றைக்கு தமிழகத்தில் நம்முடைய சகோதர சகோதரிகள் இன்றைக்கு விலைமதிக்க முடியாத உயிரை நாம் இழந்திருக்கின்ற நேரத்தில் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் வருகிறது. இது எந்த கட்சி அந்த கட்சி என்றெல்லாம் பார்க்கக் கூடாது. பொதுமக்கள் என்ற கண்ணோட்டத்தில நாங்கள் பார்க்கின்றோம்.
ஆகவே, இது மிகுந்த வேதனையோடு இந்த கருத்தை தெரிவிக்கின்றேன். ஆக இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் சிந்தித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் பல்வேறு கட்சிகள் தமிழகத்தில இருக்கின்றனர். அவர்கள் பல பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கின்றனர், அனுபவம் இருக்கின்றது. அந்த இடத்தில் எவ்வளவு கூட்டம் வரும், ஒரு மாவட்டத்தில் எவ்வளவு கூட்டம் வரும், ஒரு தொகுதியில் எவ்வளவு கூட்டம் வரும், அந்த கூட்டத்தை எப்படி சமாளிப்பது, எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதெல்லாம் அவர்களுக்கு ஓரளவு அனுபவம் இருக்கின்றது.
தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் ஒரு அனுபவம் இருக்கிறது. அந்த அடிப்படையிலே பொதுக்கூட்டம் நடத்துகின்ற காரணத்தினால் இப்படிப்பட்ட தள்ளுமுள்ளு ஏற்படும் பொழுது அதை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார்கள். அதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும்.
அதோட அரசாங்கம், காவல்துறையும் இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மெரினா கடற்கரையில் ஏர் ஷோ நடத்தியபோது சரியான முறையில் பாதுகாப்பு ஏற்படாத காரணத்தினால் சுமார் ஐந்து பேர் இறந்துவிட்டார்கள்.
அங்கேயே அப்படிப்பட்ட சம்பவம் நடைபெறுகின்ற பொழுது, இப்படி ஒரு அரசியல் கட்சி தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்கின்ற பொழுது ஏற்கனவே நாலு மாவட்டத்தில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இது எல்லாம் என்னென்ன பிரசனைகள் என்பது அரசும் காவல் துறையும் ஆய்வு செய்து அதற்கு தக்கவாறு பாதுகாப்பு வழங்கியிருந்தால் இந்த உயிர் சேதத்தைத் தடுத்திருக்கலாம்.
நாங்களும் பொன்விழா கண்ட கட்சி, ஆட்சி செய்த கட்சி, எங்கேயுமே இப்படி தடை செய்யவில்லை. ஆக வேண்டுமென்றே திட்டமிட்டு ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்கட்சிக்கு ஒரு நீதி என இருக்கக்கூடாது. ஆளுங்கட்சியுடைய முதலமைச்சர் வருகின்ற பொழுது கூட்டமே இல்லாத இடத்தில கூட ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அதை நான் குறை சொல்லவில்லை இருந்தாலும் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கிறார்களோ, அதைப் போல இன்றைக்கு நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது அரசினுடைய கடமை, முதலமைச்சருடைய கடமை, காவல்துறை கடமை. அந்த கடமையில் இருந்து அவர்கள் தவறிவிட்டார்கள். அதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.
இவ்வளவு வேகமா இந்த ஒரு நபர் கமிஷன் அமைத்ததில் என்ன நோக்கம் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் வருகின்ற பொழுது கிடைக்கப்பட்ட தகவல் விஜய் அவர்கள் அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் ஆம்புலன்ஸ் வருகிறது. அப்போது அவர் ஒரு கொடியின் பெயரைச் சொல்லி கொடி கட்டிட்டு இவ்வளவு ஆம்புலன்ஸ் எதுக்கு வருது என்று கேட்கிறார்கள். இது எல்லாம் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆக மயங்கி விழுகிறார்கள் என்பது ஆம்புலன்ஸ் காரர்களுக்கு எப்படி தெரியும்? கூட்டம் நடத்துகிறவர்கள் மேல இருக்கிறார்கள். மேல ஏறிப் பார்த்தால் எல்லாமே தெரியும். நானும் கூட்டத்தில் போய் 163 தொகுதிக்கு போயிட்டு வந்திருக்கிறேன். மேலிருந்து பார்த்தால் எல்லாமே தெரியும். அப்படி முன்கூட்டியே பல ஆம்புலன்ஸ் விரைந்து சைரன் ஒலியில் வந்துகொண்டு இருக்கும் போது அவர் சொல்கிறார், எதுக்கு இந்த ஆம்புலன்ஸ் வருது என்று. அவர் அந்த கூட்டத்திலேயே பேசுவது தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆகவே இதெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கிறது. இதையெல்லாம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்பு நான்கு மாவட்டத்தில் இதே கட்சியுடைய தலைவர் பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்த பொதுக்கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டார்கள், எவ்வளவு பேர் எழுதி கொடுத்தார்கள் என்று இந்த காவல்துறைக்கு தெரியாதா? இந்த அரசாங்கத்துக்கு தெரியாதா? ஆகவே அவருடைய கடமையிலிருந்து தட்டி கழிப்பதற்காக இந்த அறிவிப்பை கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இதையெல்லாம் நீங்கள் கேட்கிற கேள்வி, இது ஒரு கற்பனையான கேள்வி தான். விஜய் மீது நடவடிக்கை எடுப்பார்களா, எடுக்க மாட்டார்களா? இவ்வளவு பெரிய துயரம் நடந்தது. அதைத்தான் பார்க்க வேண்டும். இன்றைக்கு போன உயிரை மீட்க முடியுமா? நம்ம குடும்பத்தில் ஒருவரை இழந்தால் எவ்வளவு வேதனை என்பதை நினைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுங்கள். தயவுசெய்து அரசியல், இது எந்த இடத்தில் தவறு நடந்தது, எந்த காரணத்தில் நடந்தது, இதைத்தான் நாம் ஆராய்ந்து இறுதி முடிவு கொடுக்க வேண்டும். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படாதவாறு பார்க்க வேண்டும். அப்படியெல்லாம் பேசுவது சரியில்லை என்பது என்னுடைய கருத்து. விலை மதிப்பிட முடியாத உயிரை இழந்து இருக்கிறோம். ஒவ்வொருவரும் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. எங்களை பொறுத்தவரைக்கும் மனித உயிர் முக்கியம். மக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற பொழுது, கலந்து கொண்ட மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படக்கூடாது.
நடந்த நிகழ்வு மிக கொடூரமான, மிக வேதனையான, அதிர்ச்சியான நிகழ்வு. இதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் ஓர் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் இவ்வளவு பேர் இறந்ததாகத் தெரியவில்லை. இவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்று சொன்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
பொதுவாக, அரசியல் கட்சி தலைவர்கள் கவனிக்க வேண்டும். மற்ற கட்சிகள் எல்லாம் அனுபவமுள்ள கட்சிகள். அந்த கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், கட்டமைப்பு இருக்கிறது. அந்த கட்டமைப்பின் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையிலே கூட்டம் நடத்தும் போது சிறிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு அனுபவம் அவர்களிடம் இருக்கிறது. நாங்களும் மாநாடு நடத்தி 13–14 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். அதேபோல பல கூட்டங்கள் நாங்கள் நடத்தி இருக்கிறோம்.
பல அரசியல் கட்சிகள் தமிழகத்தில் கூட்டங்கள் நடத்தி இருக்கின்றனர். அதில் தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு அனுபவம் பெற்றுள்ளனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில அவர்கள் அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், திமுகவை தொடர்ந்து எதிர்ப்பதாக எல்லா கூட்டங்களிலும் விஜய் பேசி வந்தார். முதல்வர் இந்த சம்பவம் நடந்த உடனே சென்னையிலிருந்து வந்தது, ஒரு நபர் குழு அமைத்தது, 10 லட்சம் நிவாரணம் வழங்கியது. இதில் ஏதாவது அரசியல் இருக்குமா என்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு, "இது அரசினுடைய கடமை. முதலமைச்சர் வந்து இந்த கடமையை செய்தது இயல்பு. அவர் செய்யவில்லை என்றால் தவறு. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளனர். எல்லா இடத்திலும் அரசாங்கம் அப்படித்தான் செய்யும். ஏனென்றால் எந்த அரசாங்கமாக இருந்தாலும் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படும் பொழுது உடனுக்குடன் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது அரசினுடைய கடமை. அந்த கடமையை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது" என்றார்.
இதேபோல கள்ளக்குறிச்சியில் நடந்தது. அப்பொழுது முதல்வர் போகவில்லை. இப்போது ஆர்வமாக வந்துள்ளார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
"அது வேறு, இது வேறு. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம். அதுவும் அரசாங்கம் செய்த தவறால்தான் 68 பேர் உயிரிழந்தனர். ஒரு இறப்பதற்கு முன்பே, முந்தைய நாள் ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது விஷச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கே அவர்கள் இறக்கின்ற நிலை ஏற்பட்டது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை உண்மையை மறைத்து தவறான செய்தியை வெளியிட்டது. அதன் விளைவாக அடுத்த நாள் துக்கத்திற்கு சென்றவர்கள் விஷச்சாராயத்தை குடித்ததால் உயிரிழந்தனர். இதற்கு அரசாங்கமே காரணம். அதனால்தான் முதலமைச்சர் அங்கு போகவில்லை என்று நான் கருதுகிறேன்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து பேசுகையில், "ஓர் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் போது முழு பாதுகாப்பு கொடுப்பது அரசியல் நிலைமை. காவல்துறை அதனை செய்யவில்லை என்பதுதான் ஊடகத்திலும் பத்திரிகையிலும் வந்த செய்தியின் மூலமாக தெரிகிறது. நிவாரண உதவி எங்களைப் பொறுத்தவரைக்கும் விலைமதிக்க முடியாதது. எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் ஈடாகாது. அரசாங்கம் நிவாரணம் அறிவித்திருக்கிறது.
ஒரு கட்சி தலைவர் இன்னொரு கட்சி தலைவருக்கு அறிவுரை சொல்ல முடியாது. அது ஏற்புடையதல்ல. இறந்தவர்களில் இன்னும் சிலர் அடையாளம் காணப்படவில்லை. அதை அரசாங்கமே கண்டுபிடித்து ஊடகத்தின் மூலம் புகைப்படத்தை வெளியிட்டு உடலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அவர்கள் அறிக்கையை வெளியிட்ட பிறகு தான் பதில் சொல்ல முடியும்.
அதேபோல இந்த தவெகே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இரண்டு பேர் அபாய நிலையில் இருக்கின்றனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதனை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றவர்கள் பூரண குணமடைய வேண்டும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
Edappadi Palaniswami | ADMK | AIADMK | TVK | TVK Vijay | Karur | Karur Stampede | Stampede |