தமிழ்நாடு

மகளிர் உதவித் தொகை: தேர்தலுக்காக தளர்வுகள் அறிவிப்பு என இபிஎஸ் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கியது தான் திமுகவின் சாதனை.

கிழக்கு நியூஸ்

| Edappadi Palaniswami | ADMK

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால் திமுக அரசு மகளிர் உதவித் தொகையில் தளர்வுகளை அறிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய இந்தப் பயணம் விழுப்புரம் சென்று இன்று கடலூர் மாவட்டம் வந்தடைந்தது.

கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலியில் இன்று பயணம் மேற்கொண்டு மக்களிடத்தில் பரப்புரை மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

பண்ருட்டியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். 2026 தேர்தல் திமுகவுக்கு மரண அடி கொடுக்கிற தேர்தலாக இருக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 50 மாத காலம் ஆகிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கியது தான் திமுகவின் சாதனை. நீதி கேட்டால் ரூ. 1,000 கொடுத்தீர்கள். உங்களுடைய அப்பாவின் பணத்தைக் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் பணத்தைக் கொடுக்கிறீர்கள். அதுவும் கடன் வாங்கி பணத்தைக் கொடுக்கிறீர்கள். இந்தக் கடனை யார் கட்டுவது? நீங்கள் (மக்கள்) தான் கட்ட வேண்டும்.

அதுவும் குடும்பத் தலைவிகளுக்கு 28 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 1,000 கொடுக்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என சட்டப்பேரவையில் பல முறை ஸ்டாலினை எச்சரித்தோம். 28 மாதங்கள் போராடி இந்த ரூ. 1,000-ஐ வாங்கிக் கொடுத்தோம்.

ஒரு வாரத்துக்கு முன்பு மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கிறேன், விதியைத் தளர்த்திக் கொடுக்கிறேன் என்கிறார். இதை மக்கள் பிழைக்க வேண்டும், பெண்கள் துன்பப்படுகிறார்கள் என கொடுக்கவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வரவிருக்கிறது. அந்த மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற வேண்டும். அதற்காகக் கொடுக்கிறீர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்கலாமா?" என்றார் எடப்பாடி பழனிசாமி.