தமிழ்நாடு

அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி | KA Sengottaiyan |

கட்சியிலிருந்து நீக்காமல் பொறுப்புகளிலிருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளார் செங்கோட்டையன்.

கிழக்கு நியூஸ்

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து கே.ஏ. செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் செப்டம்பர் 5 அன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மனம் திறந்து பேசினார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார் செங்கோட்டையன். மேலும், 10 நாள்களுக்குள் இதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டால், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்வேன் என்றும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கே.பி. முனுசாமி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், காமராஜ், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செங்கோட்டையனைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்காமல், பொறுப்புகளிலிருந்து மட்டுமே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஈரோடு புறநகர் மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.ஏ. சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம். ஈஸ்வரமூர்த்தி (ஏ) சென்னை மணி, கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் என்.டி. குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம். தேவராஜ், அத்தாணி பேரூராட்சிச் செயலாளர் எஸ்எஸ். ரமேஷ், துணைச் செயலாளர் வேலு (எ) தா. மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் கே.எஸ். மோகன்குமார் ஆகியோரையும் பொறுப்பிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய செங்கோட்டையன், "தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க வலியுறுத்தினேன். அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதால் வேதனை இல்லை; மகிழ்ச்சியே!" என்று தெரிவித்துள்ளார்.

KA Sengottaiyan | ADMK | AIADMK | Edappadi Palaniswami