வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூட்டணிக்குள் நிலைப்பாடு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை
இதற்கிடையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். ஏற்கெனவே கடந்த ஜனவரி 17 அன்று முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாம்கட்ட வாக்குறுதிகள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,200-ல் இருந்து ரூ. 2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்
வாழ்வாதார உதவியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே மீண்டும் பின்பற்றப்படும்.
இஸ்லாமிய கிறிஸ்துவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
AIADMK General Secretary Edappadi Palaniswami has released second-phase election promises, including the waiver of education loans taken by students from banks.