அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தளவில், திமுக சார்பில் கனிமொழி தலைமையில் தேர்தல் வாக்குறுதி உருவாக்கும் குழு அமைக்கப்பட்டு, அவர் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டு வருகிறார். மறுபுறம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்டங்களாகத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். ஏற்கெனவே கடந்த ஜனவரி 17 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், இன்று மூன்றாம்கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.
மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதி
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மூன்றாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
வாக்குறுதிகள் என்னென்ன?
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000, பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ. 8,000-த்தில் இருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ. 1,000 வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
Edappadi Palaniswami made the third phase election promises that if the AIADMK comes to power, Rs. 10,000 will be given to each family as a relief fund to ease the burden on the people.