அதிமுகவில் இல்லாத செங்கோட்டையனைப் பற்றி பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், 1972 முதல் அதிமுகவில் நிர்வாகியாக இருந்தவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வேளாண்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 5 அன்று அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் விலக்கப்பட்டவர்களையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார். இதனால் அடுத்த நாளே அதிமுக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் அக்டோபர் 30 அன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அதன் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் தன்னை இணைத்துக் கொண்டார். இன்று அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை உள்ளிட்டவற்றை விஜய் வழங்கினார். அதன்பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில், “ஒருவர் நான் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவரைத் தான் என்று இறைவன் தண்டிப்பான்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
“செங்கோட்டையன் அதிமுகவின் உறுப்பினர் இல்லை. அதனால் அவர் தவெகவில் இணைந்தது பற்றி எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஒருவர் கருத்தில் இன்னொருவர் தலையிட முடியாது” என்றார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami said that there is no need to respond about Sengottaiyan, who is not in the AIADMK.