கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று மேற்கொண்ட மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலுமிருந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த நாள் கரூருக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் மீது பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அரசுத் தரப்பிலும் தவறு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்குக் காரணமான ஸ்டாலின் அரசைக் கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் செய்தியில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
"Many residents insist that the disaster was neither accidental nor unforeseen and that it was the outcome of poor planning and official neglect"
அதாவது, "கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாகத் திட்டமிடத் தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாகச் செய்தி கூறுகிறது.
'இந்தச் செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால் இந்த துயரச் சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும் என்பது தானே'.
மேலும் இந்தச் செய்தியில் கூறுவது, 'கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கே பலர் வந்துவிட்டனர். மதியம் 3:00 மணிக்கு யாரும் சாலையில் வாகனங்களில் போக முடியவில்லை. மாலை அப்பகுதியில் திரும்பக் கூட இடமில்லை' என அப்பகுதியில் வசிக்கும் சீதாராம் என்பவர் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும் மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லில்லி' என்பவர் கூறும் போது, விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின்தடை ஏற்பட்டதாகவும், மைக் வேலை செய்யவில்லை என்றும், கூட்டம் அமைதியிழந்தது என்றும், அந்த நெரிசலில் இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்து விட்டதாகவும் கூறுகிறார். லில்லி என்பவர் கூறியதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது. அப்பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர் மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாகக் கூறுகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. ஜெனரேட்டராலோ, மின்துறை மூலமோ மின்தடை ஏற்பட்டாலும், கூட்டம் பதற்றம் அடையத்தானே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா? இதில் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இதுபற்றி எந்த விவரமும் இல்லை. இது பற்றியெல்லாம் எந்தப் பாதுகாப்பு திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழத்தானே செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட இடம் 10,000 பேர் மட்டுமே கூட வசதியுள்ள நிலையில், 25,000 மக்கள் கூடுவதை காவல் துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் அதிக அளவு கூடுவதை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
இந்தச் செய்தியில் ஈரோட்டில் இருந்து வந்து உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறுவது 'ஒரு சில காவலர்களே சாலையோரம் நின்று இருந்தனர். பல காவலர்கள் வெளி வளையத்தில் போக்குவரத்தை சரி செய்தனர். 10 முதல் 15 காவலர்கள் வரை மட்டுமே வாகனத்தை ஒட்டியும், முன்னும் நடந்து வந்தனர். அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்திருந்தால், இந்தத் துயர சம்பவம் தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கள நிலவரப்படி கூட்ட இடத்தில் போதுமான காவலர்களைக் கொண்டு ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அரசு தவறிவிட்டது என்பது தான் இதன் பொருள். மேலும் விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் காவலர்கள் உள்ளே கொண்டு வரவும் அதைப் பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில் பொதுமக்களை பாதுகாப்பதில் காட்டவில்லை என்பது தானே இதன் மூலம் தெரிகிறது.
ஆனால் கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாகக் கூறுகிறார். இது ஒரு வேலை விதிமுறைகளாக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். அதன் பிறகு எண்ணிக்கையை அவர் குறிப்பிடவேயில்லை. மேலும் உண்மையில் எவ்வளவு காவலர்கள் கூட்ட நிகழ்வுக்கு பணியமர்தப்பட்டனர் என்பதை ஏன் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்தச் சம்பவ நிகழ்வின் போட்டோக்களிலும், வீடியோக்களிலும் குறிப்பாகக் கூட்டம் நடந்த இடத்தில் அதிகமாகக் காவலர்கள் காணப்படவில்லை என்று தான் மக்கள் பேசுகின்றனர். இது எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களாலும், சம்பவ இடத்தில் இருந்தவர்களாலும் கூறப்படும் உண்மைகள். இவற்றை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திடத் தவறிய மாநில அரசின் தவறுகளை மறைத்து இந்த அரசை பெருமைப்படுத்தும் விதமாகப் பேசும் பக்க வாத்தியங்கள் இந்தச் செய்தியை மீண்டும் படித்து உண்மையை உணர்ந்து நடுநிலையோடு பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Karur Stampede | Edappadi Palaniswami | ADMK | TVK Vijay |