ANI
தமிழ்நாடு

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடக்கம்!

மேட்டுப்பாளையம் விவசாயிகளை சந்தித்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

ராம் அப்பண்ணசாமி

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனியின் சுற்றுப்பயணம் இன்று (ஜூலை 7) தொடங்கியது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்குப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண திட்டம் கடந்த ஜூலை 2 அன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஜூலை 7 அன்று கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் தொடங்கி, ஜூலை 23 அன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதற்கட்ட சுற்றுப்பயணம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் இன்று (ஜூலை 7) காலை எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளை சந்தித்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இன்று மாலை ஊட்டி சாலையில் உள்ள பிளாக் தண்டர் பொழுதுபோக்கு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் பிரசார வாகனத்தில் இருந்தபடி, 5 இடங்களில் அவர் பொதுமக்களிடம் பேசவுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணத்தில் பாஜக தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.