கோப்புப்படம் 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கைத் துரோகி: அண்ணாமலை

கிழக்கு நியூஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கைத் துரோகி என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலளிக்கும் வகையில் விமர்சித்துப் பேசினார்.

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக இருந்த குலசேகரன் ஆணையத்துக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை, நீட்டிப்பு கொடுக்கவில்லை. நீட்டிப்பு கொடுத்திருந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடந்திருக்கும். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள், கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனப் பழி சுமத்துகிறார்கள். பிஹார், கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் இருக்கும்போது, தமிழ்நாட்டுக்கு மட்டும் அதிகாரம் இல்லையா?

சில தலைவர்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக, அதிகார வெறிக்காக அதிமுகவை அழித்து வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தன்னுடன் இருப்பவர்களைச் செய்தியாளர்களைச் சந்திக்கவைத்து அதிமுகவைக் காப்பாற்றிவிடலாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

தொண்டர்கள் அனைவரும் மாற்றுக் கட்சியை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாஜகவை நோக்கி பெருமளவில் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதன் தாக்கத்தை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தில் பார்க்கலாம்.

நம்பிக்கை துரோகி என்கிற பெயர் ஒருவருக்குப் பொருந்துமானால், அது எடப்பாடி பழனிசாமி. பிரதமர் தில்லிக்கு அழைத்துச் சென்று அருகில் அமரவைப்பார். ஆனால், இங்கு சுயலாபத்துக்காக, பாஜக வேண்டாம் என்று ஒதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி. இந்த முடிவால் பல இடங்களில் டெபாசிட்டை இழக்கவைத்து மக்கள் பாடம் புகட்டினார்கள்.

கோவையில் வெறும் டெபாசிட்டை வாங்கிய கட்சி, பாஜகவைப் பற்றி குறைகூறுகிறார்கள். கோவையில் உங்களுடையக் கட்சியைவிட இரு மடங்கு, அதாவது 34% வாக்குகளுக்கு மேல் பாஜக பெற்றுள்ளது. 6 எம்எல்ஏ-க்களை வைத்துக்கொண்டு, மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது அதிமுக. அவர்களுடைய வேட்பாளர் போட்டியிட்ட சொந்தத் தொகுதியிலேயே அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்று எனக்கு அறிவுரை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்.

எங்களுடையக் கட்சி அகில இந்திய அளவில் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். இவர்கள் 2019, 2021-ல் தோல்வியடைந்துள்ளார்கள். ஈரோட்டை சொந்த கோட்டை என்று சொல்லி போட்டியிட்டார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த ரகசியம் அண்ணாமலைக்குத் தெரியும், தெரிந்தும் பொய் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

தொலைபேசியில் என்னிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது என்னுடைய சொந்த ஊர், சொந்த கோட்டை, 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், எனவே நான் மட்டும் போட்டியிட வேண்டும், ஓ. பன்னீர்செல்வத்திடம் அறிவுரை கூறுங்கள் என்று என்னிடம் கூறினார். நான் மட்டும் போட்டியிடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என என்னிடம் வலியுறுத்தினார்.

இதற்காகக் கண்ணியமாக, கம்பீரமாக ஓ. பன்னீர்செல்வம் ஒரு வார்த்தைகூட பேசாமல் தொண்டர்கள் ஒன்றாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ஒதுங்கி நின்றார்கள். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தீர்கள்? ஆயிரமாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டு, அண்ணாமலைக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் ரகசியம் தெரிந்தும் சரித்திரத்தைத் திரித்துப் பேசுகிறார் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்தை நான் கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பதாகக் கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறினார். இன்று, ஈரோடு கிழக்கில் குளறுபடி நடந்ததாகக் கூறி விக்கிரவாண்டி தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறுகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா? புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறும் வித்தகராக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார்.

உங்களுக்கு அடிமையாக இருப்பதற்காக பாஜக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியைக் கொடுப்பதற்காக பாஜக உள்ளது. உங்களுக்கு அங்கீகாரம் அளித்த பிரதமரை முதுகில் குத்தியுள்ளீர்கள். இதுதான் நீங்கள் அளித்த பரிசு. நம்பிக்கை பற்றி பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இதற்கான அருகதை அவருக்கு இல்லை" என்றார் அண்ணாமலை.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை வாயில் வடை சுடுவதாகவும், இவரது தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதாக மாயத் தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும் விமர்சித்திருந்தார்.