2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கைக்கோர்க்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7 முதல் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திமுக அரசு மீதான விமர்சனங்களை வைக்கிறார், அதிமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார். தினமும் சாலைப் பேரணி மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது விவசாயிகளுடன் கலந்துரையாடி வருகிறார், செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார், நேர்காணல்கள் அளித்து வருகிறார்.
திருவாரூரில் இருந்தபோது தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். இதில் 2026-ல் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும், ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனப் பல்வேறு கருத்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி திருத்துறைபூண்டியில் பேசியது தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அதிமுக - பாஜக கூட்டணியைக் கெடுக்கும் நோக்கில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்ற பிரசாரத்தைக் கட்டமைக்கின்றன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் திட்டமிடப்பட்ட தீய பிரசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது அது" என்றார்.
கூட்டணி ஆட்சி குறித்து பாஜகவுக்கு நேரடியாகச் சொல்லும் தங்களுடைய செய்தி என்ன என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சிமுறையை மக்கள் விரும்புவார்கள். பல ஆண்டுகளாக மக்கள் விருப்பத்துக்கு ஏற்பதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் இதையே தான் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் இதைத் தான் விரும்புகிறோம். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" என்றார் அவர்.
முரண்களைக் களைய பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு, "எந்த முரணும் இல்லை. தங்களுடைய கட்சியினரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி ஆட்சி குறித்த விருப்பத்தை வெளிப்படுத்தும். விமர்சனங்களை வைத்தும் எங்களுக்கிடையே முரண்பாடுகளை உண்டாக்கியும் அதிமுக - பாஜக கூட்டணியை முறிக்க பலர் முயற்சித்து வருகிறார்கள். அது எடுபடாது. அதிமுக - பாஜக கூட்டணி 100% உறுதியானதாக இருக்கும்" என்று பதிலளித்தார்.
கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக விஜயிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதா?
எடப்பாடி பழனிசாமி: இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
கேள்வி: கூட்டணியில் சேர அவருக்கு அழைப்பு விடுவீர்களா?
எடப்பாடி பழனிசாமி: மக்கள் விரோத திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்.
கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இது பொரு்நதுமா?
எடப்பாடி பழனிசாமி: விஜயும் திமுகவை வீழ்த்த வேண்டும் என முனைகிறார். இது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்.
கேள்வி: சீமானின் நாம் தமிழர் கட்சி?
எடப்பாடி பழனிசாமி: ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுடைய பொதுவான பார்வை. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. உரிய நேரத்தில் தெளிவு கிடைக்கும்.
கேள்வி: பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் எப்படி அதிமுகவுடன் கைக்கோர்க்கும்?
எடப்பாடி பழனிசாமி: 1999 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் இதுபோன்ற கட்சிகள் எப்படி கூட்டணியில் (பாஜகவை உள்ளடக்கிய திமுக தலைமையிலான கூட்டணி) இணைந்தன?
Edappadi Palaniswami | AIADMK | ADMK | DMK | MK Stalin | Tamilaga Vetri Kazhagam | Vijay | TVK Vijay | TVK | Seeman | Naam Tamizhar | BJP | ADMK - BJP Alliance | ADMK - BJP | Coalition Government |