எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் யாருக்கு ஆதரவு?: எடப்பாடி பழனிசாமி தகவல்

கிழக்கு நியூஸ்

பத்திரிகைகளும், ஊடகங்களும் மத்திய, மாநில அரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்படும் வகையில் கருத்துத் திணிப்பை வெளியிட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் மேகேதாட்டுவில் அணை கட்டித் தீர்வோம் எனத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகத்தில் முன்பு ஆட்சி செய்திருந்த பாஜகவும் அணை கட்டுவோம் என்று உறுதியாகக் கூறினார்கள்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். குடிநீர்ப் பிரச்னை கடுமையாகிவிடும்.

ஆனால், மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசு விளம்பரங்கள் வெளியிட்டு வந்தாலும்கூட, இன்றைய திமுக அரசு ஒரு கண்டனத்தைக்கூட பதிவு செய்வதில்லை. தமிழ்நாடு அரசு கர்நாடக அரசிடமிருந்து 3 டிஎம்சி தண்ணீரைக் காவிரியிலிருந்து திறந்துவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். கர்நாடக அரசு இதை நிராகரித்தது மட்டுமில்லாமல், கர்நாடக அணைகளிலிருந்து ஒரு சொட்டு நீரைக் கூட தமிழ்நாட்டுக்குத் தர மாட்டோம் என ஆணவமாகப் பேசி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

இதற்குக்கூட தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இதற்குக் காரணம், இண்டியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணிக்கு ஏதாவது பிரச்னை வந்துவிடும் என்கிற அச்சத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்று கவலைகொள்ளாமல், கூட்டணி பாதிப்படையும் என்பதற்காகக் கருத்தைத் தெரிவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் முதல் தலைமுறை வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்கு வந்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

சில பத்திரிகைகளும், ஊடகங்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்படுகின்ற வகையில் பொய்யான ஒரு கருத்துத் திணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நாம் (அதிமுக) பொருட்படுத்தத் தேவைவில்லை.

தேசியக் கட்சிகள் மாநிலங்களைப் புறக்கணிப்பதால், மாநில உரிமைகளைப் பறிப்பதால், கூட்டணியிலிருந்து விலகி அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், யாருக்கு ஆதரவு என்பதைத் தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது தெரிவிப்போம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.