விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வெளிப்படையாகக் கூட்டணிக்கு அழைத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
ஜூலை 16 அன்று சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
சிதம்பரத்தில் பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளை வெளிப்படையாகக் கூட்டணிக்கு அழைத்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளுக்கே வேட்டு வைக்கிறார். விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு. அனுமதி கொடுக்கப்படவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ஒரு மாநாடு நடத்த அனுமதி கேட்டது. அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடுக்கம்பத்தை நட முடியாது என மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகுமா அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும். இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகுமா அந்தக் கூட்டணியில் தொடர வேண்டும். சிந்தித்துப் பாருங்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுடைய கூட்டணியில் சேருகிறவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிற கட்சி அதிமுக. கூட்டணி என்பது அந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைப்பது. இன்று எல்லாக் கட்சியும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகின்றன" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முன்னதாக, கடந்த ஜூலை 8 அன்று கோவை மாவட்டம் வடவள்ளியில் பேசிய எடப்பாடி பழனிசாமி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்துப் பேசியிருந்தார்.
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன், அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லை என்று பேசுகிறார். நீங்கள் கண்டுபிடித்தீர்களா. எங்களுக்கும் எங்களுடைய கூட்டணி கட்சிக்கும் இடையே இணக்கம் இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் யார்? வந்து பாருங்கள். பாஜக, ஐஜேகே, ஃபார்வார்ட் பிளாக் என எல்லோரும் கூட்டணிக்கு வந்துள்ளார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். உங்களுக்கிடையே தான் கருத்து வேறுபாடு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொல். திருமாவளவன் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எங்களுடைய கொள்கை என்கிறார். அப்படியென்றால், உள்ளுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே ஒன்றைத்தானே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளுக்குள் எப்படியாவது கூட்டணி ஆட்சி வரக் கூடாதா என உள்மனசு சொல்கிறது. வெளியில் இல்லை, இல்லை இப்போது கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பில்லை என அவரே சொல்கிறார். இரு கருத்துகளையும் திருமாவளவனே குறிப்பிடுகிறார். ஆக, உங்களுடைய கூட்டணியில் தான் மிகப் பெரிய குழப்பம் காணப்படுகிறது" என்றார் எடப்பாடி பழனிசாமி.
வடவள்ளியில் பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விமர்சித்துப் பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
"திமுக கூட்டணியில் இருக்கும் குட்டி கட்சிகள். அவை எந்தெந்தக் கட்சிகள் என்பது உங்களுக்கே தெரியும். கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டே போகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்று முகவரி இல்லாமல் இருக்கிறது. முத்தரசன் அவர்கள் அடிக்கடி ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இந்தச் சூழலில் தான், சிதம்பரத்தில் இன்று பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மிக வெளிப்படையாக கூட்டணி அழைப்பை விடுத்துள்ளார்.
Edappadi Palaniswami | EPS | ADMK | Alliance | VCK |Communist | CPI | CPIM | Viduthalai Chiruthaigal Katchi | Election | Chidambaram | ADMK Alliance | DMK Alliance | NDA Alliance | NDA