திமுக மக்கள் விரோத அரசை அகற்றக்கூடிய ஒத்த கருத்துடையக் கட்சிகள் எல்லாம் தங்களோடு கூட்டணி அமைக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
கேள்வி: தவெக பிரியப்பட்டால், எங்களுடைய கூட்டணியில் இணைந்து கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
"அவர் அவருடையக் கட்சி கருத்தைச் சொல்கிறார். நான் தெளிவாகக் கூறிவிட்டேன். திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம், மக்கள் விரோத அரசாங்கம். அந்த மக்கள் விரோத அரசாங்கத்தை அகற்றக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் எங்களோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்" என்று பதிலளித்தார்.
பொங்கல் தொகுப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:
"தைப் பிறந்தால் வழி பிறக்கும். தமிழனுடைய முக்கியப் பண்டிகைகளில் தைப் பொங்கல்தான் முக்கியப் பண்டிகை. அந்தப் பண்டிகையை மகிழ்ச்சியோடு அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் தான் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற பொழுது ஜெயலலிதா தான், இந்த பொங்கல் தொகுப்பைக் கொடுத்தார்கள்.
அந்த பொங்கல் தொகுப்பு கொடுக்கின்ற பொழுது, அத்துடன் குடும்ப அட்டைக்குத் தலா ரூ. 2,500 நிதியும் கொடுத்தார்கள். இது அண்ணா திமுக ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
பொங்கலுக்கு இன்னும் குறுகிய காலம் தான் இருக்கிறது. இந்தப் பொங்கல் தொகுப்பு எவ்வாறு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. நான் ஏற்கெனவே கோபிச்செட்டிபாளையம் எழுச்சி பயணத்தின் போது தெரிவித்தேன்.
இதுவரைக்கும் இந்த ஏழை, எளிய மக்கள் தைப் பொங்கல் அன்று மகிழ்ச்சியாக அந்த பண்டிகையைக் கொண்டாட முடியாத ஒரு சூழல் இருக்கின்றது. இந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இறுதி ஆண்டு. இதற்கு மேல் இவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள். அதனால் இந்த ஆண்டாவது இந்த மக்களுடைய மனம் குளிர்கின்ற விதமாக மகிழ்ச்சி அடைகின்ற விதமாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற விதமாக தலா ரூ. 5,000-ஐ பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காரணம், நான் முதல்வராக இருந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது நாங்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ. 2,500 ரூபாய் கொடுத்தோம். அப்போது ஏன் ரூ. 5,000 கொடுக்கக் கூடாது என்று இதே முதல்வர் கேள்வி எழுப்பினார்.
அதைத்தான் நாங்களும் வைக்கிறோம். நீங்கள் முதல்வராக இருக்கிறீர்கள். அன்றைய தினம் எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற பொழுது, எங்களுடைய அரசுக்கு நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். குடும்ப அட்டைக்கு ரூ. 5,000 தை பொங்கல் அன்று வழங்க வேண்டும்.
அந்த கோரிக்கையை தான் நாங்கள் இப்பொழுது வைக்கிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ. 5,000 பொங்கல் தொகுப்போடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.
100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு பெயரில் செய்துள்ள மாற்றம் மற்றும் திட்டத்தில் செய்துள்ள மாற்றம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்:
"திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நிறைவேற்றினார்களா? இன்றைக்கு மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக உயர்த்தியிருக்குது. பாராட்ட மனம் இல்லை. ஆனால், அந்த பெயர் தொடர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
மாநில அரசு மீது நிதிச்சுமை அதிகரிப்பதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு, "அதை எங்கு வாதாட வேண்டும்? நாடாளுமன்றத்தில் தான். அதற்கு தான் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாநில அரசின் நிதிப் பிரசனைகளை நாடாளுமன்றத்தில் முழுமையாக அழுத்தம் கொடுத்துப் பேச வேண்டும்.
அண்ணா திமுக–பாஜக கூட்டணி காலத்தில் காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தது. அதை நடைமுறைப்படுத்த 22 நாள்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தோம். அது அண்ணா திமுகவின் சாதனை. தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் தான் பேச வேண்டும். வெறும் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றக் கூடாது" என்றார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் தூய சக்தியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami called Anti-DMK parties to join hands with NDA Alliance before Election.
Edappadi Palaniswami | TVK | TVK Vijay | ADMK | NDA Alliance | Nainar Nagenthiran |