தமிழ்நாடு

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையரும், துறையின் அமைச்சரும் முரண்பாடான கருத்துகளைக் கூறுகின்றனர்.

ராம் அப்பண்ணசாமி

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இன்று (டிச.27) மாலை செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு,

`இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த 23-ம் தேதி இரவில் அத்துமீறி நுழைந்த ஞானசேகரன் என்பவர், அங்கிருந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது ஞானசேகரனுக்கு கைபேசி அழைப்பு வந்ததாகவும், அதை எடுத்து அவர் சார்..சார்.. எனப் பேசியதாகவும் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. அந்த சார் யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எப்படி ஞானசேகரனால் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித்திரிய முடிந்தது? அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் 56 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே வேலை செய்வதாகக் கூறுகிறார்கள். மற்றவை ஏன் இயங்கவில்லை? மக்கள் நடமாடும் பகுதியில் இப்படி ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

எப்படி ஒரு சரித்தரப் பதிவேடு குற்றவாளி தங்குதடையில்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாட முடிகிறது? அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டது. இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையரும், துறையின் அமைச்சரும் முரண்பாடான கருத்துகளைக் கூறுகின்றனர்.

இப்படி முரண்பட்ட கருத்துகள் நிலவும் காரணத்தால், உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவேண்டும். ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவருகின்றன. எனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு நீதி கிடைக்கும் விதமாக இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்’ என்றார்.