கோப்புப்படம் படம்: எக்ஸ் தளம் | கே பொன்முடி எம்எல்ஏ
தமிழ்நாடு

பொன்முடியின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

கிழக்கு நியூஸ்

செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிம வளத் துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்தார். அப்போது விழுப்புரத்தில் 5 செம்மண் குவாரிகளை மகன் மற்றும் உறவினர்கள் பெயரில் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் செம்மண் அள்ளியதால், அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக பொன்முடி, இவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்டம் மத்தியக் குற்றப்பிரிவால் 2012-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்புடைய வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. பொன்முடிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்தாண்டு சோதனையும் நடத்தியது. இந்த நிலையில், பொன்முடியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக செம்மண் அள்ளிய வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இவருடைய மகனும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருடைய ரூ. 14.21 கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.