தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 9 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரித்தல், கூட்டணியை உறுதிப் படுத்துதல், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தலில் முதன்முறையாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் போட்டியிடுகிறார்.
விஜயின் புதுச்சேரி மாநாடு
கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று புதுச்சேரியில் தவெக சார்பில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், புதுச்சேரியின் நீண்ட நாள் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தனது பரப்புரையை மேற்கொண்டார். அப்போது புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.
விசில் சின்னம் ஒதுக்கீடு
இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, வெற்றிக் கோப்பை உள்ளிட்ட 10 விருப்பச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பொதுச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் விசில்
முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட ஒரே பொதுச் சின்னமாக தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டது. அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டும் இச்சின்னம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கடுத்தபடியாக புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில நிர்வாகக் குழு நியமனம்
இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அம்மாநிலத்திற்கான புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்து தவெக கட்சி அறிவித்துள்ளது. நிர்வாகிகள் 30 பேரை நியமித்து, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்துடன் இணைந்து செயல்படவுள்ள நிர்வாகக் குழுவுக்குக் கட்சியின் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிலேயே தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள செய்தியையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
Election Commission of India has alloted the whistle symbol to the Tamilaga Vettri Kazhagam for the Puducherry Assembly elections 2026