தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் 400 கி.மீ., எங்கள் ஆட்சியில் 781 கி.மீ.: அமைச்சர் கே.என். நேரு

சென்னையில் உள்ள 398 அம்மா உணவகங்களில் விலையில்லாமல் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பத்தாண்டு வருடகால அதிமுக ஆட்சி காலத்தில் வெறும் 400 கி.மீ தூரத்துக்கு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை 781 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு

சென்னையில் இன்று (அக்.16) பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என். நேரு பேசியவை பின்வருமாறு:

`குறுகிய நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்திருந்தபோதும் மழைநீர் வடிந்திருக்கிறது. ஓவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 990 மின் மோட்டர்களை வைத்து தண்ணீர் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 400 டிராக்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் 4,75,000 பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது. அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் வடிந்திருக்கிறது. மக்களின் பாதுகாப்புக் கருதி, அவர்களுக்கு தேவைப்பட்ட அனைத்து பணிகளையும் முதல்வர் செய்திருக்கிறார். சென்னையில் உள்ள 398 அம்மா உணவகங்களில் விலையில்லாமல் 65,700 நபர்கள் உணவருந்தியுள்ளனர்.

கடந்த வருடமும் இதே போல அம்மா உணவகங்களில் விலையில்லாமல் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அடையார் உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை எங்கள் ஆட்சியில் சிறப்பாக மேற்கொண்டுள்ளோம். 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் வெறும் 400 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டன.

சென்னையில் நடைபெறவேண்டிய பணிகள் குறித்து திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 781 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மழைநீர் வடிகால் பணிகள் பிற பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

இதனால்தான் சென்னையில் 4 மணி நேரத்தில் மழைநீர் வடிந்திருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளால் ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் மெதுவாக வடிகிறது’ என்றார்.