துரை வைகோ - கோப்புப்படம் 
தமிழ்நாடு

செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல்: துரை. வைகோ வருத்தம் தெரிவிப்பு

பாதுகாப்புப் பணிக்காக அங்கே நின்றிருந்த காவல்துறையினர் தலையிட்டு, செய்தியாளர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

ராம் அப்பண்ணசாமி

விருதுநகரில் நடைபெற்ற மதிமுக கட்சிக் கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்காக, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை. வைகோ எம்.பி. வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை 10) மாலை 4 மணிக்குத் தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்திற்கு வந்திருந்ததால், மண்டபம் நிறைந்து நூற்றுக்கணக்கானோர் வெளியே அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 8 மணி அளவில் வைகோ பேசத் தொடங்கிய சில நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால், மண்டபத்திற்குள் அமர்ந்திருந்த கட்சியினர் சிலர் எழுந்து வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் மின்சாரம் வந்ததும், வைகோ மீண்டும் பேசத் தொடங்கினார்.

அந்த சமயம் செய்தியாளர்கள் ஒளிப்பதிவு செய்வதைப் பார்த்த வைகோ, `மின்சாரம் தடைப்பட்டதும் வெளியே சென்றபிறகு காலி சேர்களை படம் எடுக்கிறீர்களே, அறிவிருக்கிறதா? வெளியே இருக்கும் ஆயிரம் பேரை படம் எடுப்பீர்களா? கேமராவைப் பிடுங்கி ஃபிலிமை பிடுங்கி எறியுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அங்கிருந்த தொண்டர்கள் சிலர் செய்தியாளர்களைத் தாக்கியுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக அங்கே நின்றிருந்த காவல்துறையினர் தலையிட்டு, செய்தியாளர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக துரை. வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆண்டுகால வரலாற்றில் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் இவ்வாறு என்றும் நடந்து கொண்டது இல்லை.

கட்சி அலுவலகத்தில் அவரிடம் ஒரு ஊடகவியலாளர், அவரது நேர்மையான பொது வாழ்க்கை குறித்து அவதூறான கேள்வி எழுப்பிய போதும் நேர்காணலை நிறுத்திவிட்டு அவரை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்தவர் வைகோ. செய்தியாளர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தோழமை உணர்வோடுதான் பழகி வருகிறேன்.

எந்த கேள்வி எழுப்பினாலும் இன்முகம் காட்டியே பதில் கூறுகின்றேன். ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் மறுமலர்ச்சி திமுகவின் கருத்து ஆகும். சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு, தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.