படம்: https://twitter.com/PKSekarbabu
தமிழ்நாடு

பா. இரஞ்சித் யாரென்று எனக்குத் தெரியாது: அமைச்சர் சேகர் பாபு

கிழக்கு நியூஸ்

இயக்குநர் பா. இரஞ்சித் யாரென்று தனக்குத் தெரியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த சனிக்கிழமை நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பேசிய பா. இரஞ்சித், "இங்குள்ள ஆட்சி, ஆட்சியாளர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் என அனைவருக்கும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதியைப் பெற்றுத் தரும் வரை ஓயமாட்டோம். எங்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை எனக் கேள்வி கேட்கிறோம். அப்படி கேட்டால், எங்களுடையப் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்கிறார்கள்.

நாங்கள் கட்சிக்காரர்களாக சேர்ந்து எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற அடிமைகள் கிடையாது நாங்கள். இங்கே ஒரு மேயர் இருக்கிறார். திமுகவில் இருப்பதால் நீங்கள் மேயர் அல்ல. இடஒதுக்கீட்டால்தான் நீங்கள் மேயர் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள். கயல்விழி செல்வராஜ், நீங்கள் ஏன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக மாறினீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் வாங்கிக்கொடுத்த இடஒதுக்கீடு எனும் சட்டத்தின் அடிப்படையில் மாறியிருக்கிறீர்கள்" என்று திமுக அரசு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராகக் கடுமையாக பேசினார்.

இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பா. இரஞ்சித்தின் விமர்சனம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, பா. இரஞ்சித்தை யாரென்று தெரியாது என்றார். மேலும், "அரசியல்வாதியென்றால் எனக்குத் தெரியும். இவரைத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சென்னை மேயர் பிரியா உடனிருந்தார்.