தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) படம்: https://www.instagram.com/actorvijay/
தமிழ்நாடு

வதந்திகளை நம்ப வேண்டாம்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கட்சியில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம் என்ற பெயரில் ஒரு படிவம் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை குறித்து பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்."